15 Jul 2019

ஜனாதிபதித் தேர்தல் எனும் குதிரைப் பந்தயத்திலே சிறுபான்மையினர் கோட்டை விட்டுவிடக் கூடாது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்.

SHARE
ஜனாதிபதித் தேர்தல் எனும் குதிரைப் பந்தயத்திலே சிறுபான்மையினர் கோட்டை விட்டுவிடக் கூடாது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்.
எதிர்வருகின்ற ஜனாதிபதித் தேர்தல் எனும் குதிரைப் பந்தயத்திலே சிறுபான்மையினராகிய நாம் கோட்டை விட்டுவிடக் கூடாது என முன்னாள் விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார, கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர்அலி தெரிவித்தார்.
ஏறாவூர் ஓட்டுப்பள்ளி பிரதேசத்தில் வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் முகமாக யுவதிகளுக்கான தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் அமைப்பாளரும், ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க பொது முகாமையாளருமான எம்.எல். அப்துல் லத்தீப் தலைமையில் சனிக்கிழமை 13.07.2019 இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் அமீரலி,

நல்ல அரசியல்வாதிகள் தங்களுக்கு ஏற்படும் அவமானங்களை அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அதைத்தான் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீனிடம் காண்கின்றோம்.‪

சிறந்த அரசியலைச் செய்வதற்கு, சிறந்த நிருவாகத்தை நடாத்துவதற்கு, சிறந்த சேவைகளைச் செய்வதற்கு இனம், மதம், சாதி தேவையில்லை.

நானும் எமது கட்சியின் தலைவரும் எமது கட்சியிலுள்ள ஏனையவர்களும் மிகவும் தெளிவான பார்வையோடு இன, மத, பிரதேச வேறுபாடற்று சேவை செய்கின்ற ஒரு அரசியலைத்தான் முன்னெடுக்கின்றோம்.

அதேவேளை சமூகம் பிளவுபட்டுவிடக் கூடாது என்பதற்காக இனிவரும் காலங்களில் திட்டமிட்டு செயற்பட வேண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் நாங்கள் அவசரப்பட்டு விடக் கூடாது, ஓடும் குதிரையிலே எது நல்ல குதிரை என்று தேர்ந்தெடுப்பதுதான் நமது வேலை. இதனை நின்று நிதானித்து சிறந்த தீர்மானத்தோடு செய்ய வேண்டும்.

எங்களை உதைத்துத் தள்ளி, உருட்டு விடாத, கடிக்காத, ஏறி மிதிக்காத  குதிரை எதுவென்று பார்த்துத் தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே இந்தக் குதிரைகள் கடந்த காலத்தில் நம்மை எப்படி நடாத்தின என்று அலசி ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இம்முறை சிறந்த குதிரைக்குப்  பந்தயம் கட்டுவதிலே நாம் தோல்வியடைந்து விடக் கூடாது. கோட்டை விட்டு விடக் கூடாது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் அவசரப்பட்டு விட்டார்கள் அந்நேரம் சிந்திப்பதற்கும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. இந்த நாட்டிலே நல்ல அறுவடையைக் கொண்டு வரக் கூடிய ஜனாதிபதி யாராக இருப்பார் என்பதிலே கடந்த காலத்தைப் போன்று அவசரப்பட்டு முடிவெடுத்து விடாமல் ஆற அமரச் சிந்தித்து முடிவெடுக்க இம்முறை போதியளவு கால அவகாசம் உள்ளது. அந்த வாய்ப்பபை மக்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நாட்டின் இறைமைக்குப் பங்கம் ஏற்படாமல் இந்த நாட்டைப் பாதுகாக்ககப் பாடுபட்ட இந்த நாட்டு முஸ்லிம் சமூகம் இப்பொழுது இருப்பைப் பற்றிக் கேள்விக்குள்ளாபகியிருக்கிறது.

நாங்கள் ஒருபோதும் பெரும்பான்மை சமூகத்துக்கு சவால் விடுக்கவில்லை, சமாதானச் செய்தியாக இதனை வெளியிடுகி:ன்றோம். பெரும்பான்மை சமூகத்திலுள்ள பெரும்பாலானோர் சமாதானத்தை நேசிப்பவர்களாகவே இருப்பது எங்களுக்குப் பெருமை தருகிறது. அதனால் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: