3 Apr 2019

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றவேண்டிய கடமைகளை எமது தமிழ் இளைஞர்கள் முகநூல்களில் ஆற்றிவருகின்றனர்.

SHARE
எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றவேண்டிய கடமைகளை எமது தமிழ் இளைஞர்கள் முகநூல்களில் ஆற்றிவருகின்றனர்.
இவ்வாறான இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரிவுகளுக்கான தலைவர் கே.ஹரிதரன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் தமிழ் பிரிவுக்கான  அலுவலகம் திங்கட்கிழமை (01.04.2019) மாலை மட்டக்களப்பில் திறந்துவைக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரிவிற்கான பிரதான  அமைப்பாளர் கு.ஹரிதரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளருமான தயாசிறி ஜயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மட்டக்களப்பு, திருமலை பிரதான வீதியில் சின்ன ஊறணியில் அந்த அலுவலகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்போது 25 கர்ப்பிணிப்பெண்களுக்கு உதவிகளும் அதிதிகளினால் வழங்கிவைக்கப்பட்டன.

அலுவலகம் திறக்கப்பட்டதை தொடர்ந்து ஊறணி அமெரிக்க மிசன் மண்டபத்தில் கட்சியின் மறுசீரமைப்பு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கட்சி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், முக்கிஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டதுடன் பொதுச்செயலாளர் கௌரவிக்கப்பட்டார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பிரிவிற்கான பிரதான அமைப்பாளர் கு.ஹரிதரனின் சொந்த நிதியில் இருந்து 100 மாணவர்களுக்கான உதவித்தொகை வங்கிப்புத்தகங்களும், 25 கர்ப்பிணி தாய்மாருக்கான உபசரிப்பு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.  வழங்கிவைக்கப்பட்டன.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய தலைவர் கு.ஹரிதரன்…..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது மத , இன மொழிக்கு அப்பால்பட்ட ஒரு கட்சியாகும். இனத்தினை மதத்தினை பிளவுபடுத்துகின்ற அரசியல் எங்களுக்கு வேண்டாம். இனமதமொழிகளுக்கு அப்பால் அனைவரும் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மறுசீரமைக்க முன்வரவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டம் பெரும்பான்மையாக தமிழர்கள் வாழும் மாவட்டமாகும். அந்த பகுதியில் தமிழ் தலைவர்கள் ஒருவர் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில்  நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக என்னை தமிழ் பிரதேசத்தின் தலைவராக நியமித்துள்ளார்கள். அதற்காக ஜனாதிபதிக்கும் கட்சியின் பொதுச்செயலாளருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் அரசியல் இலாபம் கருதி செயற்படுபவன் அல்ல. ஸ்ரீலங்கா  சுதந்திரக்கட்சியும் பொய்வாக்குறுதிகளை வழங்கியதுமில்லை. எமது தமிழ் இளைஞர்களின் தொழில்வாய்ப்பு, பொருளாதாரம், கல்வி ஆகியவற்றினை சரியான முறையில் வழங்கவேண்டும் என்பதற்காக இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஊடாக இணைந்துள்ளேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ளுராட்சிசபைகள் ஊடாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்களை  தேர்ந்தெடுத்துள்ளோம். செங்கலடி பிரதேசசபையினை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி கைப்பற்றியது. இது எங்களுக்கு மாபெரும் வெற்றியாகும். இதேபோன்று எதிர்வரும் காலங்களில் சிறந்த வேட்பாளர்களை களமிறக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு மட்டக்களப்பு  மாவட்டத்தில் சிறந்த வெற்றிவாய்ப்பினை ஏற்படுத்துவதே எமது நோக்கமாகும்.

நாட்டை பிரித்து உரிமை பெற்றுக்கொடுப்போம் என்று தேசியம் பேசிக்கொண்டு பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கும் உணர்ச்சி அரசியல்வேண்டாம், நாட்டினை பிளவுபடுத்துகின்ற அரசியல் வேண்டாம், மொழியை பிரிக்கின்ற அரசியல்வேண்டாம். எதிர்கால எமது சந்ததியினரின் வறுமையினையும் கல்வியையும் பொருளாதாரத்தினையும் அபிவிருத்திசெய்யும் நோக்கிலான உணர்வுபூர்வமான அரசியலையே நாங்கள் செய்யவேண்டும்.

அதன் காரணமாகவே நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை  தெரிவுசெய்துள்ளோம். இன்று எத்தனை எமது பிரச்சினைகள் பாராளுமன்றம் கொண்டுசெல்லப்பட்டு ஆராயப்படுகின்றது? மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பிரச்சினைகள் பாராளுமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதில்லை.

இன்று எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றவேண்டிய கடமைகளை எமது தமிழ் இளைஞர்கள் முகநூல்களில் ஆற்றிவருகின்றனர். இவ்வாறான இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தயாராகவுள்ளது. என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: