மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் அண்மையில் வெளிவந்த கல்விப்பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைப்பெறுபேற்று வலயதரப்படுத்தலில் 91வது இடத்தினைப் பிடித்து சாதனையை நிலைநாட்டியுள்ளது.
கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் தோற்றி, உயர்தரத்திற்கு தகுதிபெற்ற மாணவர்களின் தரப்படுத்தலிலேயே மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் இச்சாதனையை நிலைநாட்டியுள்ளது.
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் ஆரம்பிக்கப்பட்டு 8தடவைகள் கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றியிருக்கின்றது. தோற்றிய காலப்பகுதியில் 2018ம் பரீட்சைபெறுபேற்றின் அடிப்படையில் பல சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. 2016ம் ஆண்டு 98வலயங்களில் 98வது இடத்தினையும், 2017ம் ஆண்டு 99வலயங்களில் 93வது இடத்தினையும் பெற்று முன்னேற்றத்தினை அடைந்த நிலையில், அண்மையில் வெளியாகிய 2018ம் ஆண்டிற்கான சாதாரணதரப்பரீட்சையில் 91வது இடத்தினைப்பெற்று இன்னமும் முன்னிலையை அடைந்திருக்கின்றது.
2016ம் ஆண்டு 39.05 வீத்தினைப்பெற்றிருந்த குறித்த வலயம், 2017ம் ஆண்டு பெறுபேற்றில் 59.76வீதத்தினையும், 2018ம் ஆண்டிற்கான பெறுபேற்றில் 64.66வீத சித்தியினையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் வலய வரலாற்றில் அதிகூடிய சித்திவீதம் 2018ம் ஆண்டு பெறுபேற்றில் பெறப்பட்டுள்ளமை எடுத்துக்காட்டத்தக்கது. இதேவேளை வலயம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 2017ம் ஆண்டு பெறுபேறுவரை 9ஏ சித்திகள் வலயத்தில் பெறப்படாத நிலையில், 2018ம் பெறுபேற்றின் அடிப்படையில் கன்னன்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இரு மாணவர்கள் 9ஏ சித்திகளைப்பெற்று வரலாற்றுச்சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.
இதேவேளை குறித்த வலயத்தினைச்சேர்ந்த கடுக்காமுனை வாணி வித்தியாலயம் 100வீத சித்தியினைப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேபோன்று 8ஏ,வீ சித்திகளும் சில பாடசாலைகளில் பெறப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் பின்நிலையில் நிற்கின்ற, பெரும்பான்மையாக கூலிவேலை செய்கின்ற குடும்பங்களை கொண்ட, கஸ்ட, அதிகஸ்ட பாடசாலைகளை உடைய வலயமாக மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் உள்ளது. பிரத்தியேக கல்வி நிலைய வசதிகளும் மிகவும் அரிதாகவும் உள்ள இப்பிரதேசத்தில், பாடசாலைக்கல்வியினை மாத்திரமே பயன்படுத்தி இப்பிரதேசத்து மாணவர்கள் சாதித்துவருகின்றனர்.
மாணவர்களின் முயற்சியும், ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோரின் ஆலோசனையும், வழிகாட்டலின் மூலமாகவும், முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் அகிலா கனகசூரியம் அவர்களின் விசேட செயற்றிட்டங்கள், ஆலோசனைகள், திட்டமிடல்கள், வழிகாட்டல்கள், கண்காணிப்பு மற்றும் பெற்றோரின் ஆர்வம் போன்ற கூட்டுமுயற்சியின் மூலமாக இச்சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச்சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களுக்கும், இதற்காக உழைத்த அனைவருக்கும் மட்டக்களப்பு மேற்கு சமுகம் நன்றினையும், பாராட்டினையும் தெரிவித்து நிற்கின்றது.
0 Comments:
Post a Comment