காட்டு யானைகளுக்கு வேலி அமைத்து தமக்கு உயிர்ப் பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி ஆர்ப்பாட்டம்
காட்டுயானைகளுக்கு வேலி அமைத்து தமக்கு உயிர்ப் பாதுகாப்பளிக்குமாறு அரசாங்கத்திடம்கோரி மட்டக்களப்பு - தொப்பிகல பகுதி பொதுமக்கள் புதன்கிழமை 20.02.2019 ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டனர்.
திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை திகிலிவட்டை கிராமத்தில் காட்டு யானை தாக்கியதில் இரண்டு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டிலிருந்து 50 மீற்றர் தூரத்திலுள்ள தனது மாமியாரின் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது புதருக்குள் இருந்து வெளிவந்து திடீரென வழிமறித்த காட்டு யானை இவரைத் தாக்கியுள்ளது.
இவ்வாறு கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் பல உயிரிழப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
யானைகளை சரணாலயத்தில் கொண்டு விடு இல்லையேன் எங்களை சரணாலயத்தில் அடைத்துவை, தமிழ் அரசியல்வாதிகள் யானையுடன் கொண்டாட்டம் தமிழ் மக்கள் யானைகளால் திண்டாட்டம், ஆற்றிலும் காட்டிலும் சாகும் எங்களைக் காப்பாற்றுங்கள், எங்கள் உயிர்கள் மிருகங்களுக்கு பலி கொடுக்கவா, யானைகளால் தொடரும் உயிரிழப்பை தடுத்து நிறுத்துங்கள் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கிராம மக்கள் ஏந்திச் சென்றனர்.
அங்கு கோஷமிட்டு தமது கோரிக்கைகளை தெரிவித்த பின்னர் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கான மகஜரொன்றை கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபுவிடம் கையளித்தனர்.
கடந்த போர்ச்சூழலினால் வெகுவாகப் பாதிப்பட்டு இடம்பெயர்ந்து மீளக்குடியமர்ந்துள்ள தமது வாழ்வாதரத் தொழில் மற்றும் உடைமைகளையும் காட்டு யானைகள் அழிக்கின்றன.
எனவே யானைகளின் தாக்குதலிலிருந்து பாதுகாப்புப் பெறும்பொருட்டு உடனடியாக மின்சார வேலிகள் அமைக்கப்படவேண்டும் என்பதுவே தமது கோரிக்கை என ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
கிரான் செயலகப்பிரிவில் எந்தவொரு பகுதியிலும் இதுவரை யானை வேலி அமைக்கப்படவில்லை. சுமார் 69 கிலோ மீற்றருக்கு யானை வேலி அமைக்கப்படவேண்டியுள்ளது. காலத்திற்குக்காலம் காட்டு யானைகளினால் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் பொதுமக்களினால் கையளிக்கப்பட்டுள்ள இந்த மகஜரினை மாவட்ட செயலாளரிடம் ஒப்படைக்கவுள்ளேன் என கிரான் பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபு தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment