19 Jan 2019

மட்டு.தளவாய்க் காட்டுக்குள் உள்நுளைவதற்கு பாதைகளைப் புணரமைப்புச் செய்யும் பணி ஆரம்பித்து வைப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள தளவாய்க் காட்டுக்குள் உள்நுளைவதற்கான பாதைகளைப் புணரமைப்புச் செய்யும் பணி சனிக்கிழமை (19)  ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை (18) மாலை போரதீவுப் பற்றுப் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இவ்விடையம் தொடர்பான தீர்மானத்திற்கிணங்க இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் யோ.ரஜனி முன்னாள் கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் இ.பிரசன்னா, மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் கோ.கருணாகரம், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் போரதீவுப்பற்றுப் பிரதேச சுற்றுவட்ட உத்தியோகஸ்த்தர் ஏ.ஏ.கலீல், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், அப்பகுதி பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை, மண்முனை தென் மேற்கு பிரதேச சபை, மண்முனை மேற்கு பிரதேச சபை, மற்றும் போரதீவுப்பற்று பிரதேச சபை, ஆகிய சபைகளின் 5 ஜே.சி.பி பெக்கோ இயந்திரங்களைக் கொண்டு இவ்வேவைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. தளவாய்க் காட்டுக்குள் உள் நுளைவதற்காக தூர்ந்துபோய் கிடக்கும் பாதைகள் அதன்போது திறக்கப்படவுள்ளன.

இப்பாதைகள் திறக்கப்பட்டால் அக்காட்டில் பகல் வேளைகளில் தங்கி நிற்கும் காட்டு யானைகளை துரத்துவதற்கு இலகுவாக அமையும், எனவும், இத்திட்டத்தை முன்நெடுத்த அனைவருக்கம் நன்றி கூறுவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் தொடர்ந்து காட்டுயானைகளின் தொல்லைகள் அதிகரித்து வருகின்றன. இப்பிரதேசத்தில் யானைகள் பகலில் அப்பகுதியில் அமைந்துள்ள தளவாய்க் காட்டிலே தங்கி நின்று கொண்டு இரவில் வெளியேறி மக்களையும், பயிரினங்களையும் தாக்கி அழித்து வருகின்றன.

தளவாய்க் காட்டில் பகல் வேளையில் தங்கி நிற்கும் காட்டு யானைகளை அக்காட்டுக்குள் உள் நுளைந்து துரத்துவதற்கு உரிய பாதைகள் மிக நீண்ட காலமாக தூர்ந்தபோய்க் கிடக்கின்றன. இதனால் வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் இது ஒரு பாரிய சவாலாக அமைந்து வருகின்றது.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் குறித்த தளவாய்க் காட்டுக்குள் உள்நுளைவதற்கு, பற்றைக் காடுகளால் மூடித் தூர்ந்து போய்க் கிடக்கும் பாதைகளை மீண்டும் துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரத்திடம் (ஜனா) அப்பகுதி பொதுமக்களும், சிவில் அமைப்பும், வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.






























SHARE

Author: verified_user

0 Comments: