மட்டக்களப்பு மாவட்டத்தில் ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசரணையுடன் பயனாளிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட வீடுகள் சிறந்த முறையில் நிருமாணிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதற்கட்டமாக ரணவிரு சேவா அதிகார சபையின் அனுசணையுடன் சுமார் 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 38 வீடுகள் தமிழ் முஸ்லிம் குடும்பங்களுக்கும் ஒரு வீடு சிங்களக் குடும்பத்திற்கும் நிருமாணிக்கப்பட்டுள்ளன.
ரணவிரு சேவா பயனாளிக் குடும்பங்களின் நலன்களை அறிந்துகொள்ளும் பொருட்டு வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடும் கள விஜயம் திங்கட்கிழமை 08.10.2018 இடம்பெற்றது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் கொக்கட்டிச்சோலைக்குச் சென்ற குழுவினர் அங்கு ரணவிரு சேவா பயனாளிக் குடும்பத்திற்காக அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டைப் பார்வையிட்டனர்.
குழுவில் ரணவிரு சேவா மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் உள்ளிட்ட இன்னும் அலுவலர்களும் இடம்பெற்றிருந்தனர்.
வீட்டுத் திட்டத்தைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவித்த மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், “எந்தவொரு தனி அல்லது பொது அபிவிருத்தித் திட்டங்களிலும் பயனாளிகளின் பங்களிப்பு முழுமையானதாக இருக்குமாயின் அத்திட்டம் வெற்றி பெறும்.
அந்த வகையில் ரணவிரு சேவா பயனாளிகள் தமக்குக் கிடைக்கப்பெற்ற உதவிகளைக் கொண்டு சிறந்த முறையில் தமக்கான வீடுகளை நிர்மாணித்துள்ளார்கள். இந்த அர்ப்பணிப்புள்ள செயற்பாடு பூரண திருப்தியளிக்கிறது” என்றார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளார்கள்.
இவர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 39 பயனாளிக் குடும்பங்களுக்காக முதற் கட்ட வீட்டுத் திட்டம் தற்போது பூரணமாக்கப்பட்டுள்ளதாக ரணவிரு சேவா மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment