நாளாந்தம் நினைத்துப் பார்க்க முடியாத நோயினால் பீடிக்கப்பட்டு மரணங்களையும், அவஸ்தைகளையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இன்றைய சமூகத்தில் நஞ்சற்ற உணவுகளையும், காய்கறிகளையும், பழங்களையும் நாம் ஒவ்வொருவரும் உற்பத்தி செய்து ஆரோக்கியமான சமூகமாக வாழ்வதற்கு ஒத்துழைக்க வேண்டும். ஆரோக்கியம் பேணவேண்டுமாயின் முதலில் நஞ்சுள்ள உணவுகளையும், காய்கறி பழங்களையும் தவிர்த்துவிட வேண்டும் என மண்மனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் திருமதி. சிவப்பிரியா வில்வரெட்ணம் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராம சக்தி வேலைத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சேதன விவசாய பழங்கள் அறுவடை விழா எருவில் கிராமத்தில் திங்கட்கிழமை (17)பிரதேச செயலாளர் திருமதி.சிவப்பிரியா வில்வரெட்ணம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தலைமை தாங்கி உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதன்போது மேலும் கருத்துத் தெரிவிக்கையில்….
இன்று நாங்கள் நோயுள்ள சமூகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தொற்றா நோய்கள், பாரியநோய்கள் என்று நாளாந்தம் நோயாளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இதற்கு அதிகளவான நேரத்தையும், கூடுதலான பணத்தையும் வீண்விரயம் செய்து சமூகத்தில் நோயாளியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நோயுள்ள சமூகமாக வாழ்வது எங்களின் உணவுப் பழக்கத்திலும், நாகரீக உணவுத் தேடலிலும்தான் காணப்படுகின்றது. பலர் பல்வேறு வகையான நோய்களில் அகப்பட்டுக் கொண்டு மரணிக்கின்றார்கள். இன்னும் சிலர் நோயினால் காவுகொள்ளப்பட்டு மீளமுடியாமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குரிய முழுப்பொறுப்பும் நாங்களே என்று பலர் உணராமல் உள்ளனர்.
இன்றைய சமூகத்தினர் அதிகமான உணவுத்தேடல்களை நஞ்சாகவே தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.அதே நஞ்சுள்ள உணவுகளையும், காய்கறி, பழங்களையும்தான் இன்றைய சமூகத்தினர் உற்பத்தி செய்து வருகின்றார்கள். நஞ்சுள்ள உணவுகளை உற்பதி செய்வதையும், கொள்வனவு செய்வதையும் இன்றைய சமூகத்தினர் தவிர்த்துக் கொள்ளவேண்டும். இயன்றளவு சுகதேகியாக வாழ்வதற்குரிய திட்டமிடல்களை மேற்கொள்ள வேண்டும்.
நஞ்சுள்ள உணவுகள் சம்பந்தமாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். நஞ்சுள்ள உணவுகளையும், காய்கறி, பழங்களையும், பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இவ்வாறான உணவுகளை உற்பத்தி செய்யும் விவசாயிகள் கிருமிநாசினிகளின் பாவனையை முற்றாக தவிர்த்து நஞ்சற்ற உணவுகளை உற்பத்தி செய்துதான் சந்தைக்கு அனுப்பவேண்டும். இயன்றளவு எங்களுக்கு தேவையான நஞ்சற்ற உணவுகளையும், காய்கறி பழங்களையும் நாம் உற்பத்தி செய்துகொள்வதுதான் எங்களுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடியது. நோயற்ற சமூகத்திலிருந்து நாம் விடுபடவேண்டும். எம்முடைய மூத்த சமூகம் ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கின்றார்கள் தரவுகள் தெரிவிக்கின்றது. இவ்வாறு அவர்கள் நோயற்றவர்களாக வாழ்ந்தற்கு காரணம் அவர்களின் உணவுப்பழக்கமும், நஞ்சற்ற காய்கறி, பழங்களின் உற்பத்தி ஆகும் எனத் தெரிவித்தார்.
இந்த அறுவடைவிழாவில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் திருமதி எஸ்.பாக்கியராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பழ அறுவடைகள் நடைபெற்றதுடன் நஞ்சற்ற வகையில் இயற்கையாக உருவாக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யும் நிகழ்வும் நடைபெற்றது.
0 Comments:
Post a Comment