மட்டக்களப்பு – வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கட்டுமுறிவுகுளம் பகுதியில் அப்பகுதி விவசாயிகள் எதிர்கொண்டிருக்கும் காணி ஆவணப் பிரச்சினைக்கு காணி நடமாடும் சேவையை நடாத்தித் தீர்வு காணுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் மாகாண காணி ஆணையாளரைக் கேட்டுள்ளார்.
பிரதேச விவசாயிகளால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாகவே அவர் மாகாணக் காணியாளரிடம் இந்த ஆலோசனையை முன்வைத்துள்ளார்.
மாகாண காணி ஆணையாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கட்டுமுறிவுக்குள விவசாயிகள் தாங்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் தொடர்பான விவரங்களை முன்வைத்துள்ளனர்.
குறித்த பிரதேச விவசாயிகள் தாங்கள் நீண்டகாலமாக செய்கைக்குட்படுத்திவரும் காணிகளுக்கு உரித்தாவணம் இல்லாத பிரச்சினையை எதிர்கொண்டுள்ளதாக அறியத் தந்துள்ளனர். எனவே இப்பிரச்சினைக்கு காணி நடமாடும் சேவையை நடாத்தித் தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமாறு கேட்டக் கொள்கின்றேன் என்று ஆலோசனை வழங்கியுள்ளார்.
கட்டுமுறிவுகுளம் விவசாயப் பிரதேசத்தைச் சேர்ந்த 285 விவசாயிகள் கடந்த 50 வருட காலமாக காணி ஆவணங்கள் ஏதுமின்றி சிரமப்படுவதாக கட்டுமுறிவு விவசாயிகள் சங்கச் செயலாளர் ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.
இதுபற்றி விவசாய அமைச்சர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
கட்டுமுறிவுகுளம் விவசாய விஸ்தரிப்புத் திட்டத்தின் கீழ் 1967ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டுமுறிவு விவசாயக் கிராமம் உருவாக்கப்பட்டது.
ஒருவருக்கு தலா 3 ஏக்கர் என்ற அடிப்படையில் 285 குடும்பங்களுக்கு விவசாய மற்றும் குடிநிலக் காணிகள் வழங்கப்பட்டன.
ஆனால், அவர்கள் கடந்த 50 வருடகாலமாக தமது விவசாய நடவடிக்கைகளைத் தொடருகின்ற போதிலும் இன்னமும் அந்தக் காணிகளுக்கு காணி உரித்தாவணங்கள் வழங்கப்படவில்லை.
இதனால் நெற்செய்கைக்கான உர மானியம், இழப்பீடுகள், விவசாயக் கடன்கள் உள்ளிட்ட நன்மைகளை அவர்களால் பெற முடியாதுள்ளது.
மேலும், வயோதிபர்களான விவசாயிகள் தங்களது வாரிசுகளுக்கு தலைமுறை மாற்றம் செய்து காணிகளைக் கைமாறவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது மேற்படி விவசாய அமைப்பின் செயலாளர் குருகுலசிங்கம் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment