மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சனிக்கிழமை இரவு 25.08.2018 இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் தனது கால்கள் இரண்டையும் இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடமை நிமித்தமான பொலிஸ் பயிற்சிநெறி ஒன்றுக்காக திருகோணமலை செல்லும் நோக்கில் சனிக்கிழமை இரவு கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து பொலொன்னறுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் புறப்பட்டுள்ளார்.
பயணித்துக் கொண்டிருந்த இவர் புணானைப் பிரதேசத்தைக் கடக்கும்போது எதிரே வந்த ஜீப் வண்டியினால் மோதப்பட்டு படுகாயமடைந்தார்.
விபத்தில் சிக்கியவர் உடனடியாக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சத்திர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை வேகக் கட்டுப்பாட்டை இழந்து ஜீப் வண்டியில் அதிவேகமாகச் சென்று விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜீப் வண்டியைச் செலுத்தி வந்த வாழைச்சேனை - பிறைந்துரையைச் சேர்ந்த 21 வயதான (முஹம்மட் மஹ்றூப் உஸ்மான்) இளைஞர் ஒருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment