2 Jul 2018

ஏறாவூர் நகர நவீன பொதுச் சந்தை கட்டுமானப் பணிகள் குறித்து நகர மேயர் அவதானிப்பு

SHARE
ஏறாவூர் புன்னைக்குடா வீதியை அண்டியதாக நிருமாணிக்கப்பட்டு வரும் நவீன செய்னுலாப்தீன் ஆலிம் பொதுச்சந்தையின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடும் கள விஜயத்தை ஏறாவூர் நகர சபை முதல்வர் இறம்ழான் அப்துல் வாஸித் திங்கட்கிழமை 02.07.2018 மேற்கொண்டிருந்தார்
நகர திட்டமிடல் அமைச்சினூடாக சுமார் 125 மில்லியன் ரூபாய் நிதித் திட்டத்தில் இந்த சந்தையின் நிருமாணப் பணிகள் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமதினால் ஆரம்பித்து வைக்கப்பட்டு தற்போது கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கேந்திர இடமாகவுள்ள ஏறாவூரின் மிக நீண்ட காலத் தேவையான இந்தப் பொதுச் சந்தையின் நிருமாணப் பணிக்கான 1ஆம் கட்ட நிதி 2017ல் 66.19 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரச எந்திரவியல் கூட்டுத்தாபனம் கட்டுமானப் பணிகளை முன்னெடுத்து வந்தது

அதேநேரம் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த போதிலும் இரண்டாம் கட்ட நிதி ஒதுக்கீடு பாரிய சவாலாக இருந்து வந்த நிலையில் ஆரம்பிக்கப்பட்ட அபிவிருத்தியை தொடர முன்னாள் முதலமைச்சர் எடுத்துக்கொண்ட பெருமுயற்சியின் பயனாக 2ஆம் கட்ட நிதியாக தற்போது 40 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாக ஏறாவூர் நகர முதல்வர் இறம்ழான் அப்துல் வாஸித்  தெரிவித்தார்.

அந்த நிதியைக் கொண்டு நவீன பொதுச்சந்தையின் மீதமாக இருக்கும் கட்டுமானப் பணிகளை இவ்வருட இறுதிக்குள்  பூர்த்தி செய்து மக்கள் பாவனைக்கு கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுவதாக நகர முதல்வர் மேலும் தெரிவித்தார்.

பொதுச் சந்தை நிருமாண கட்டுமானப் பணிகளின் முன்னேற்றம் குறித்து பார்வையிடும் கள விஜயத்தின்போது சந்தை வியாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் பங்கெடுத்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: