எதிர்காலத்தில் சிறுவர் தொழிலாளர் உருவாகாமல் தடுக்கும் காத்திரமான வேலைத்திட்டத்துக்கான முன்னெடுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.
இதுவிடயமாக ஆராயும் உயர்மட்ட துறைசார்ந்த அதிகாரிகளின் கலந்துரையாடல் துரிதமாக இடம்பெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது விடயமாக செவ்வாய்க்கிழமை 24.07.2018 மேலும் தெரிவித்த அவர், சிறுவர் துஷ்பிரயோகம், வேலைவாங்குதல், பணிக்கமர்த்துதல் உட்பட்ட பல்வேறு வகையான சிறுவர் உரிமை மீறல்களைத் தடுக்கும் முகமாக பல தரப்பினராலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, இத்தகைய உரிமை மீறல்கள் முற்றுமுழுவதுமாக முடிவுக்கு வந்தபாடில்லை.
சிறுவர்களுக்கிழைக்கப்படும் அநீதிகள் சம்பந்தமாக பொலிஸ் தரப்பில் சட்டம் ஒழுங்கு மாத்திரம் எனும் நியதியின் அடிப்படையில் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
அதேவேளை அதனையும் தாண்டி சமூகப் பொறுப்புக்கூறலுடன் பல விடயங்கள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது.
சிறுவர் தொழிலாளர் சம்பந்தமான வேலைத் திட்டங்களை வினைத்திறனான முறையில் முன்னெடுப்பதற்கு ஒட்டு மொத்த ஆர்வலர்களின் ஆதரவும் தேவைப்படுகிறது. இதில் சட்டமும் ஒழுங்கும் ஒரு அம்சமாகவே பார்க்கப்பட வேண்டும்.
இதற்கமைவாக உள்ளுர் பொறிமுறைகளைக் கையாண்டு சிறுவர் உரிமைகளை மீறும் சம்பவங்களுக்கெதிராக நடவடிக்கை மேற்கொண்டு அவற்றைத் தடுக்கக் கூடிய கருத்துக்கள் தொடர்பாக ஆராய்ந்து நடவடிக்கைகளைத் திட்டமிடும் கலந்துரையாடல் அரங்கம் மட்டக்களப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலாளரின் பிரசன்னத்துடன் இடம்பெறும் இந்த உயர் மட்டக் கலந்துரையாடலில் பொலிஸ் உயர் அதிகாரிகள், பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிறுவர் பெண்கள் பிரிவைச் சேர்ந்த சுமார் 100 உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக சிரேஷ்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், நன்னடத்தை அலுவலர்கள், பெண்கள் சிறுவர்கள் அலுவலர்கள் உட்பட இன்னும் பல துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
சிறுவர் சார்ந்து இடம்பெறுகின்ற சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுத்து பொலிஸாரும் இணைந்து ஆக்கபூர்வமாகக் கையாளலாம் என்பதில் இந்தக் கலந்துரையாடல் மிக்கபயனுறுதி உள்ளதாக அமையும்” என்றார்.
சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனையிலும் விற்பனையில் ஈடுபடுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment