கிழக்கு மாகாண தமிழர்களுக்கு நன்மை பயக்கும் எந்த முன்னெடுப்புக்களுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி விட்டுக் கொடுப்புடன் பங்களிப்புச் செய்ய முன்வரும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார். திங்கட் கிழமை (23) கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்… தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தனிப்பட்ட அரசியல் அபிலாசைகளுக்காகவோ பதவிகளை பெற்று ஆசனங்களை சூடாக்கிக் கொண்டிருப்பதற்காகவோ அரசியலில் பிரவேசித்த கட்சியல்ல. தம்மை ஆகுதியாக்க துணிந்த இளைஞர்களின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட கட்சி. அதன் விளைவால்தான் எந்தவித சட்ட வல்லுனர்களோ அரசியல் முன் அனுபவமோ இல்லாத போதும் 2008 தொடக்கம் 2012 வரை கிழக்கு மாகாண மக்களை நாம் நேசித்ததன் வெளிப்பாட்டை மக்கள் நேரடியாக உணர்ந்துள்ளனர். அதுவே பல தசாப்தங்களாக அரசியலில் பயணிக்கும் பல கட்சிகளுக்கு இணக்க அரசியல் மற்றும் மக்களுக்கான அரசியலின் தன்மைகளை கற்பித்துக் கொடுத்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாகாணசபை முறைமை வேண்டாம் என்ற பலரை 2012 ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தமையினை மக்கள் இன்றும் நினைவு கூறுகின்றார்கள்.
எமது கட்சியின் தலைவர் சி.சந்திரகாந்தனினால் நடாத்தப்பட்ட மக்கள் நலன்சார்ந்த அபிவிருத்திப் பணிகளையும் நிதி, நிருவாக, சமத்துவப் பங்கீட்டு ஆட்சியினை விடவும் சிறப்பாக ஆட்சி நடத்துவோம், கிழக்கில் தேனாறும் பாலாறும் ஓட வைப்போம் என்று ஆட்சி பீடம் ஏறிய தலைமைகள் என்ன செய்தார்கள் என்பதுவும் வெளிப்படையானதே.
எமது கட்சியின் தலைவர் கடந்த 1018 நாட்களுக்கு மேலாக மட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போதும் அவரின் தலைமையினை மக்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்பது உள்ளுராட்சி சபைத் தேர்தல் பறைசாற்றி நிற்கின்றது. இன்றைய சூழலில் கிழக்கின் தமிழர்களின் அரசியல் பாதைக்கு சி.சந்திரகாந்தனின் தலைமைத்துவம் அவசியமானது என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதேபோன்று நாம் உயிர் மூச்சாக நேசிக்கும் கிழக்கு தமிழரின் நலனுக்காக எந்த விட்டுக் கொடுப்புடனும் பயணிக்க எமது கட்சி தயாராக உள்ளது. கிழக்கு மாகாண தமிழர்களை ஏமாற்றி நில,டிநிதி, நிருவாக, அரசியல் ரீதியாக யார் ஆதிக்கம் செய்து அடக்க முற்பட்டாலும் அவர்களுக்கெதிராக ஜனநாயக ரீதியாக போராடவும் நாம் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment