மட்டக்களப்பு அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கட்கிழமை 25.06.2018 காலை மட்டக்களப்பு நகரின் பிரதான அஞ்சலகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.
நாடு தழுவிய ரீதியில் பல கோரிக்கைகளை முன்வைத்து, இடம்பெற்று வரும் தொடர்ச்சியான தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவே தாம் மட்டக்களப்பில் இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறிநேசன், எஸ். வியாழேந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
சக்தி வாய்ந்த அஞ்சல் மற்றும் தொலைத் தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கங்கம் மற்றும் ஒருங்கிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் தொடர் வேலை நிறுத்தத்தால் கடந்த 12ஆம் திகதியிலிருந்து நாட்டின் சகல அஞ்சல் சேவைகளும் ஸ்தம்பித்துள்ளது, இதனால் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கு,
5 வருடங்கள் கடந்த 2ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதி செய்,
கணினி தொழிநுட்பக் கோளாறுகளைச் சீர் செய்,
ஜனவரி 10ஆம் திகதி வாக்குறுதியளித்த கெபினெட் பத்திரிகைக்கு அனுமதி வழங்கி தீர்வைப் பெற்றுக் கொடு,
2012 பொறுப்புப் பரீட்சையை நடைமுறைப்படுத்து,
பொறுப்புக் கொடுப்பனவை உடனடியாக வழங்கு,
விரிவுரையாளர் சம்பளத்தை புதிய சம்பளத்துக்கு பெற்றுக் கொடு,
பொறுப்புப் பரீட்சையில் சித்தியடைந்த 1ஆம் வகுப்பு உத்தியோகத்தர்களுக்கு எம்.என். 7 வேதன மட்டத்தைப் பெற்றுக் கொடு என்பனவற்றுடன் மேலும் அரசாங்கத்தின் மூடிய திணைக்கள ஆட்சேர்ப்பு முறைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். போன்ற கோரிக்கைகள் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment