தற்போது செய்கை பண்ணப்பட்டுள்ள சிறுபோகச் செய்கையின் அறுவடை ஜுன் மாத இறுதியளவில் இடம்பெறுகின்றபோது மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்சந்தைப்படுத்தும் திணைக்களம் நெல் கொள்வனவுக்காக இயங்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பான வேண்டுகோள் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் செவ்வாய்க்கிழமை 22.05.2018 முன்வைக்கப்பட்டதாகவும் தமது வேண்டுகோளை அமைச்சர் ஏற்றுக்கொண்டதாகவும் மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவித்த யோகவேள், வருடாவருடம் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தாம் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய முடியாது அவஸ்தைப்படுகின்றனர்.
இதனால் தனியார் கொள்வனவாளர்களிடம் நெல்லை விற்று விவசாயிகள் நஷ்டமடையவேண்டியுள்ளது.
எனவே, விவசாயிகள் தமது நெல்லை நஷ்டத்திற்கு விற்பனை செய்வதும், நெல்லைக் களஞ்சியப்படுத்தி பாதுகாத்து வைக்கும் சிரமங்களையும் தவிர்ந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல நெற்களஞ்சியசாலைகளிலும் நெல் கொள்வனவு செய்யப்படுவதற்கு வசதியாக இந்த ஏற்பாட்டை அதிகாரிகள் செய்து தரவேண்டும் என்ற வேண்டுகோளை விவசாயிகள் தொடர்ச்சியாக முன்வைத்து வந்ததாக அவர் மேலும் கூறினார்.
இதேவேளை, தற்போதைய நிலையில் அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சாதாரண நெல்லின் விலை கிலோ ஒன்றிற்கு 38 ரூபாய் என்பதையும் சம்பா 41 ரூபாய் என்பதையும் எதிர்வரும் சிறுபோக அறுவடையின்போது சற்று அதிகரித்து அரசாங்கம் கொள்வனவு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோளையும் தாம் அமைச்சரிடம் முன் வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் சுமார் 61,280 ஏக்கர் நெற் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment