16 May 2018

வீடமைப்புக்காக கிடைக்கும் உதவிகளை பயனாளிகள் வீண் விரயம் செய்யாது முன்மாதிரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

SHARE
வீடமைப்புக்காக அரசினால் எந்தத் திட்டத்திற்கூடாக வழங்கப்படும் உதவிகளாயினும் அவற்றை பயனாளிகள் வீண் விரயம் செய்யாது மிகக் கவனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.ரணவிரு சேவையின் கீழ் வீடுகளைப் பெற்றுள்ள குடும்பங்களையும் ரணவிரு சேவா அதிகாரிகளையும் சந்தித்தபோது புதன்கிழமை (16) அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வைத்து ரணவிரு சேவா பயனாளிகளை சந்தித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

யுத்தத்தினால் இழப்புக்களைச் சந்தித்த குடும்பங்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் உதவ வேண்டியிருக்கின்றது.

எனவே, எல்லோருக்கும் எல்லா உதவிகளும் கிடைக்கப் பெற வேண்டும் என்று போட்டி போட்டுக் கொண்டு அலையக் கூடாது.

கிடைக்கும் உதவிகள் பணமாகவோ பொருளாகவோ எவ்வாறிருந்த போதிலும் அந்த உதவிகளை வீண் விரயம் செய்யாது நல்ல முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

அடுத்தவருக்கு கிடைக்கும் உதவிகளைப் பற்றி மனம் புழுங்கக் கூடாது.
மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 39 ரணவிரு சேவா குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்கு உதவி கிடைக்கப்பெற்றது பெரும் பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

இந்த வீடுகளின் பயனாளிகள் சிறந்த முறையில முன்மாதிரியாக இந்த நிதியைப் பயன்படுத்தி பொறுப்புணர்ச்சியுடன் செயற்பட்டால் அதன் மூலம் மற்றவர்களுக்கும் உதவிகள் கிடைக்க சந்தர்ப்பம் ஏற்படும்” என்றார்.

இச்சந்திப்பில் மட்டக்களப்பு உதவி மாவட்டச் செயலாளர் ஏ.நவேஸ்வரன், ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன, மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப், அதன் உப செயலாளர் எச்.எம். மன்சூர், பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட ரணவிரு பயனாளிக் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 

SHARE

Author: verified_user

0 Comments: