சாதனை படைத்தவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள் ஆனால் பாராட்டுக்கள் எதிர் கால தலைமுறையினரை ஊக்குவிப்பதாக அமைகின்ற போது சிறந்த விளைதிறனான வெளியீட்டினை பெறமுடியும்.
என பட்டிருப்பு கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்குப் பொறுப்பாக உள்ள பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.
பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு உதயபுரம் தமிழ் வித்தியாலயத்தில் திங்கட் கிழமை (14) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிடட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…
இன்று சமூகக் கட்டமைப்பை நோக்குகின்றபோது திறமையான மாணவனுடன் இன்னுமொரு மாணவனை ஓப்பிட்டு நோக்குகின்ற தன்மை காணப்படுகிறது. இதனால் திறமையான மாணவன் தன்னுள் சுய கர்வம் அடைவது மாத்திரமல்லாது தன்னைப் பெரியவராக மாற்றிக் கொள்கின்ற நிலை உருவாகுவது மாத்திரமல்லாது கீழ்படிவு ஒழுக்க விழுமியங்களை பின்பற்றாத மாணவனாக மாறுகின்றான். இவற்றுக்கு முக்கிய காரணம் சமூகமாகும். இந் நிலையிலிருந்து மாற்றம் அடையவேண்டும்.
சாதனை படைத்த மாணவர்கள் பாராட்டப்படும் அதேவேளை ஏனைய மாணவர்கள் பார்வையாளர்கள் அல்ல அவர்களிடமும் திறமைகள் தனித்துவம் விவேகம் உள்ளன. அதனை சரியான முறையில் இனங்கண்டு வழி நடத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களினதும் பெற்றோரினதும் பொறுப்பாகும்.
உதயபுரம் தமிழ் வித்தியாலயம் மிக அண்மைக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இப்பாடசாலை மாணவர்கள் பொதுப் பரீட்சைகளில் மாத்திரமல்லாது இணைப் பாடவிதானச் செயற்பாடுகளிலும் தேசியமட்டம் வரைசென்று பாடசாலைக்கு மாத்திரமல்லாது பட்டிருப்பு கல்விவலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளமையினை இட்டு சந்தோசமடைகின்றேன்.
மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்துகின்ற பாடசாலைச் சமூகத்திற்கு பட்டிருப்பு கல்வி வலயத்தின் சார்பாகபாராட்டுக்கள். பதில் அதிபர் குறிப்பிட்டது போன்று இப்பாடசாலையில் நிலவுகின்ற விஞ்ஞான ஆசிரியர் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரியர் குறைபாட்டினை உரியவர்களுடன் கலந்துரையாடி மிகவிரைவாக தீர்வினை பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment