2 May 2018

உதவியதால் வந்த உபத்திரவம் முச்சக்கரவண்டியை எடுத்துச் சென்ற வாலிபர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பியோட்டம்.

SHARE
சேர்விஸ் செய்து கொள்வதற்காக சேர்விஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட முச்சக்கரவண்டியை அவசரமான அலுவல் ஒன்றை முடித்து விட்டு 5 நிமிடத்தில் வருகின்றோம் என வாக்குறுதியளித்து முச்சக்கர வண்டியை எடுத்துச் சென்ற 4 வாலிபர்கள் அதனை விபத்தில் சிக்க வைத்து விட்டுத் தலைமறைவான நிகழ்வு புதன்கிழமை 01.05.2018 பகலளவில் மட்டக்களப்பு முகத்துவாரத்தில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,
காத்தான்குடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிக் காரர் ஒருவர், தனது முச்சக்கர வண்டியை வழமையான சேர்விஸ் செய்து கொள்வதற்காக மட்டக்களப்பு, முகத்துவாரத்தில் உள்ள சேவிஸ் நிலையத்துக்கு எடுத்து வந்துள்ளார்.

அப்பொழுது அங்கு வந்த நான்கு இளைஞர்கள், தங்களிடமுள்ள சாரதி அனுமதிப்பத்திரத்தைக் காண்பித்து உங்களது முச்சக்கரவண்டியை ஒரு அவசரமான வேலை முடித்துக் கொள்வதற்காக தந்துதவுங்கள் 5 நிமிடத்தில் திரும்பி வந்து விடுகிறோம் என்றுள்ளனர்.

இவர்களது நச்சரிப்புத் தாங்கமுடியாமல் இருந்த அதேவேளை, சேர்விஸ் நிலையத்தில் இருந்தவர்களும், அந்த இளைஞர்கள் எங்களுக்குப் பரிச்சயமானவர்கள்தான்  என்று கூறியதும், முச்சக்கரவண்டி உரிமையாளர் அந்த இளைஞர்களிடம் தனது முச்சக்கர வண்டியை ஒப்படைத்துள்ளார்.

5 நிமிடத்தில் திரும்பி வருவதாகக் கூறிய இளைஞர்கள் ஒரு மணித்தியாலம் கடந்தும் திரும்பி வராமலிருக்கும் வேளையில் அந்த இளைஞர்கள் எடுத்துச் சென்ற முச்சக்கர வண்டி முகத்துவாரம் களப்புப் பகுதியில் குடைசாய்ந்து  கிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

பொலிஸாருக்கு அறிவித்து விட்டு அவ்விடத்திற்கு விரைந்தபொழுது இளைஞர்கள் தப்பித் தலைமறைவாகியிருப்பதும் முச்சக்கர வண்டி நொருங்கியுள்ளதோடு அது களப்பு நீருக்குள் மூழ்கி இருப்பதும் தெரிய வந்தள்ளது.

களப்புக் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடித் தோணிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

தெருவோரங்களில் உள்ள காணொளிக் கமெராவின் உதவியுடன் இச்சம்பவம் குறித்து விசாரிப்பதில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் போதை தள்ளாடும் நிலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து முச்சிக்கரவண்டியைச் செலுத்திச் சென்றிருப்பதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: