10 Apr 2018

மட்டக்களப்பு விவசாயிகளுக்கு மானிய உரம் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது விவசாயிகள் மகிழ்ச்சி

SHARE
மட்டக்களப்பு விவசாயிகளுக்கு திங்கட்கிழமை 09.04.2018 முதல் மானிய உரம் விநியோகம் ஆரம்பமாகியுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகச் செய்கை ஆரம்பித்து தற்போது சுமார் ஒரு மாதத்தைக் கடந்து நெற்பயிர்கள் வளர்ந்துவிட்ட நிலையில் உரமானிய விநியோகம் ஆரம்பித்துள்ளது.

விதைப்பு இடம்பெறுவதற்கு முன்னதாக இந்த உர விநியோகம் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அது விவசாயிகள் தமது பயிர்ச் செய்கையை வளமாக ஆரம்பிக்க வாய்ப்பாக இருந்திருக்கும்.

தமக்கு மானிய உர விநியோகம் இடம்பெறவில்லை என்ற காரணத்தினால் அதிருப்தியுற்றிருந்த விவசாயிகள் ஆற்றாமை காரணமாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்த ஆயத்தமான வேளையில் அரசு உரமானிய விநியோகத்தைச் செய்துள்ளது.

இது விவசாயிகளுக்கு ஆறுதலளித்துள்ளதாயினும் வளமான அறுவடையைப் பெற்றுக் கொள்ள இந்த காலந்தாழ்த்திய உர விநியோகம் வாய்ப்பளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் என்றும் அவர் ஆதங்கம் வெளியிட்டார்.

அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும். தற்போது ஒரு 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாவுக்கு அரசு உர மானியமாக வழங்குகின்றது.

அதேவேளை 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும்  விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை சந்தையில்  1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்தற்காக அரசு சலுகை அளித்துள்ளது.

ஆயினும், அவ்வாறான சலுகை உரம் இன்னமும் சந்தைக்கு வந்து சேரவில்லை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் சுமார் 61,280 ஏக்கர் நெற் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: