முரண்பாடுகளுக்கு இன அடிப்படையிலும் மத அடிப்படையிலும் சாயம் பூசுவதால் பேரழிவுகள்தான் ஏற்படும் என கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் தெரிவித்தார்.
தேசிய சமாதானப் பேரவையின் அனுசரணையுடன் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட சர்வமதப் பேரவை உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல் செயலமர்வில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹபறணை விலேஜ் சினமன் உல்லாச விடுதியில் திங்கட்கிழமை 09.04.2018 இடம்பெற்ற இந்த செயலமர்வில் “மத நல்லிணக்கத்திற்கும் கலந்துரையாடலுக்குமான வாய்ப்பாக வர்த்தகமும் வியாபாரமும்” எனும் தொனிப்பொருளில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய உபவேந்தர், ஒரே சமூகமாக, ஒரே இனமாக, ஒரே மொழி பேசுவோராக இருந்துவிட்டால் அப்பொழுது மக்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு விடாதா என்ற கேள்வியை நாம் எழுப்பினால் மனிதர்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவது இயல்பானது அவை தவிர்க்க முடியாதது என்றும் அறிந்து கொள்ள முடியும்.
எங்கே நாம் ஒருங்கிணைப்பை இழந்திருக்கின்றோம் என்பதைப் பார்க்க வேண்டும். வர்த்தகமும் வியாபாரமும் இன நல்லிணக்கத்துக்கான இணைப்புப் பாலமாக இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.
நான் அயலவர்களான முஸ்லிம்களுக்குப் பக்கத்தில் வாழ்கின்றேன்.
ஆனால் கலவரம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியை நான் ஊடறுத்துச் செல்லும்போது பாதுகாப்புடன் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால். இப்பொழுது நிலைமை அப்படியல்ல. எமது பிரதேசத்தில் சகவாழ்வு பரஸ்பர நல்லுறவு நிலவுகிறது. நிலைமை சுமுகமாகவுள்ளது. இது நல்லிணக்கத்திற்கான உள்ளுர் சூழலும் மனிதாபிமானமும் இன்னமும் இருக்கிறது என்பதைப் புலப்படுத்துகின்றது.
அதேவேளை, முரண்பாடுகள் ஏற்படுமிடத்து நாம் வேறு வேறு திசைகளாகப் பிரிந்து தனிமைப் படுத்தப்பட்ட வாழ்க்கை முறைகளை அமைத்துக் கொண்டு பிரிவினை கோரி நிற்கின்றோம்.
ஏனைய மதத்ததைச் சேர்ந்தவர்களை அயலவராகக் கொண்டிருப்தில் நாம் பெருமையடைகின்றோமா வெறுப்படைகின்றோமா என்பதைப் பார்க்க வேண்டும்?
நமது நன்மையான விடயங்களிலும் சுக துக்கங்களிலும் பங்கெடுக்க ஏனைய சமூகத்தவர்களுக்கு இடமளிக்கின்றோமா? நமது வளர்ச்சியிலும் ஆக்கபூர்வச் செயற்பாடுகளிலும் பங்கெடுக்க நாம் அனுமதிக்கின்றோமா?
வர்த்தகப் பங்காளியாக ஏனைய மதத்தை இனத்தைச் சேர்ந்தவர்களை அனுமதிக்கின்றோமா? கல்வி, தொழிற் பயிற்சிகள், தொழில்துறை, வாழ்க்கை முறை, உட்பட்ட இன்னபிற அனைத்துச் செயற்பாடுகளிலும் நாம் பிரிந்துதான் நிற்கின்றோம்.
ஏனைய சமூகத்தவரோடு ஒரே வீட்டிலே வசிப்பதற்கு விரும்புகின்றீர்களா என்பதையும் பார்க்க வேண்டும்.
வாழ்விடம், கல்விக் கூடம், வேலைத் தளம், தொழில்துறை சார்ந்த இடங்கள், பொழுது போக்கிடங்கள், சமயமகலாசார பண்பாட்டு இடங்கள் இங்கெல்லாம் மற்றவர்களோடு எவவாறு பரிமாற்றங்களை ஊடாட்டங்களை தொடர்பாடலை வைத்துக் கொண்டிருக்கின்றோம் என்பதைப பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அடுத்த சமூகத்தவர்களின் கருத்துக்களை நாம் பெறுகின்றோமா என்பதையெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நமது பிள்ளைகளை இனம் சார்ந்து சமயம் சார்ந்து மொழி சார்ந்து கல்வி கற்பி;க்கும் சூழல் நடைமுறைதானுள்ளது.
இவற்றையெல்லாம் நாம் மாற்றியமைக்க வேண்டும்.
இது பற்றி சிவில் சமூகம் இன்னும் அதிகமாகச் சிந்தித்தால் பிரிந்து நின்று அழிவுகளை ஏற்படுத்துவதற்குப் பதிலாக எல்லோரும் சேர்ந்து அக்கபூர்வமான அழகிய பன்மைத்துவ சமூகத்தையும் அபிவிருத்தியுடன் இணைந்த சகவாழ்வும் நிம்மதியுமான நாட்டையும் உருவாக்கலாம்” என்றார்.
0 Comments:
Post a Comment