நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விஷேட நிதியைக் கொண்டு ஏறாவூர் நகர சபையின் அனுமதி பெறப்படாமல் நகர சபையின் பொறுப்பிலுள்ள சில வீதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் தொடங்கப்பட்டு இப்பொழுது அரைகுறையாக விடப்பட்டுள்ளதாக நகர சபையின் கன்னி அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் இனிவரும் காலங்களில் நகர சபையின் ஆளுகைக்குள் உள்ள பிரதேசங்களில் நகர சபையின் அனுமதி பெறப்படாமல் நாடாளுமன்ற உறுப்பினர்களாலோ அல்லது வேறெந்த விதமான நிதி மூலங்களைக் கொண்டோ இடம்பெறும் அபிவிருத்தித் திட்டங்களை நகர சபை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுமார் 3 வருட காலத்தின் பின்னர் ஏறாவூர் நகரசபையின் மாதாந்த அமர்வின் முதலாவது அமர்வு வியாழக்கிழமை 12.04.2018 நகர சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித் தலைமையில் இடம்பெற்றது.
அந்த கன்னி அமர்வில் பல்வேறு கட்சிகளையும் சுயேச்சைக் குழுவையும் சேர்ந்த தமிழ் முஸ்லிம் ஆண், பெண் உறுப்பினர்கள் 17 பேரும் கலந்து கொண்டனர்.
அங்கு நிகழ்வை ஆரம்பித்து வைத்து தனது தலைமையுரையை நிகழ்த்திய அப்துல் வாஸித், ஏறாவூர் நகர சபையின் புதிய நிருவாகம் இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமூக சகவாழ்வுக்கும், துஷ்பிரயோகமற்ற அபிவிருத்திக்கும், அரசியல் ஜனநாயகத்திற்கும் முழு நாடே திரும்பிப் பார்க்குமளவுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்பதே அனைவரின் அவாவும் என்று குறிப்பிட்டார்.
ஏறாவூர் நகர சபையின் ஆளுகைப் பராமரிப்பிலுள்ள வீதிகளில் இதுவரை இடம்பெற்று வந்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் நகர சபை அதிகாரிகளால் புதிய நகர சபை நிருவாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டபோது, சில வீதிகள் அபிவிருத்தி என்ற பெயரில் தொடங்கப்பட்டு அரையும் குறையுமாக கைவிடப்பட்டுள்ளதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அப்பொழுது நகர சபை உறுப்பினரும் கொந்தராத்துக்காரருமான எம்.எஸ். நழீம் என்பவர், நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் விஷேட அபிவிருத்தி நிதி ஒதுக்கீட்டில் அந்த வீதி நிருமாணங்கள் தன்னால் ஆரம்பித்து வைக்கப்பட்;டு இடை நடுவில் விடுபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அதற்கு நகர சபையின் முந்தைய செயலாளரின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆனாலும், இதுபற்றி நகரசபையின் பொறியியல் பிரிவைச் சேர்ந்த அலுவலர் உடனடியாக வரவழைக்கப்பட்டு அவரிடம் நகர சபையின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட்டா வீதி அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன என நகர சபை உறுப்பினர்கள் கேட்டபோது தங்களது நகர சபையின் எந்தவொரு அதிகாரியிடமிருந்தும் வீதி அபிவிருத்தரிக்கான அனுமதி பெறப்படவில்லை என அவர் தெரிவித்தார். இவ்வேளையில் சபையில் குழப்பத்திற்கிடையில் இனிமேல் எந்தவொரு வீதி அபிவிருத்தியும் நகரசபையின் அனுமதியின்றி அனுமதிக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் ஏறாவூர் வாவிக்கரை சிறுவர் பூங்கா, மற்றும் பொழுது போக்குப் பூங்கா என்பனவற்றுக்காக நகர சபையால் நபர் ஒருக்கு ரூபா 20 என்ற வகையில் அறவிடப்பட்டு வந்த கட்டணம் உடனடியாக அமுலக்க வுரும் விதத்தில் நீக்கப்படுவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த அமர்வில், நகரசபைத் தலைவர் உப தலைவர் மற்றும் அங்கத்தவர்களுக்கு உள்ளுராட்சிமன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உள்ள பொறுப்புக்கள் வியாக்கியானம் செய்யப்பட்டன.
இந்த அமர்வில் ஏறாவூர் நகர சபைச் செயலாளர் எம்.ஐ. பிர்னாஸ் உட்பட அதிகாரிகளும் கலந்த கொண்டனர்.
0 Comments:
Post a Comment