மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபையை பொதுமக்களின் பங்களிப்புடன் விசித்திரமான பிரதேச சபையாக மாற்றியமைப்பேன்.பொதுமக்களின் தேவைகளை அர்ப்பணிப்புடனும், கட்சி பேதங்களையும் மறந்தும் தங்குதடையின்றி நிறைவேற்றிக் கொடுப்பதில் ஒருநாளும் நான் பின்னிற்க மாட்டேன் என மண்முனை தென் எருவில் பற்று (களுதாவளை) பிரதேச சபைக்கான தவிசாளர் ஞானமுத்து யோகநாதன் தெரிவித்தார்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு தெரிவு செய்யப்பட்ட தவிசாளர் ஞானமுத்து-யோகநாதன் அவர்கள்
மேற்படி தவிசாளர் துறைநீலாவணை பொதுநூலகத்திற்கும், துறைநீலாவணை கிராமத்தின் தேவைகளை இனகாணுவதற்காகவும் புதன் கிழமை (11) அக்கிராமத்திற்குச் சென்று பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதன்போது; துறைநீலாவணை வட்டாரத்த்தின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் கணபதிப்பிள்ளை சரவணமுத்து, கிராமசேவையாளர் வ.கனகசபை, ஊடகவியலாளர் க.விஜயரெத்தினம், பிரதேச சபை உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.பிறைசூடி, துறைநீலாவணை யுனைடெட் விளையாட்டுக் கழகத்தின் முன்னாள் தலைவர் க.திலீபன், நூலகத் தொண்டர்களான திருமதி.சற்சொருபதி, திருமதி.மோவிதா கவிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நூலகத்தின் குறைபாடுகளையும், கிராமத்தின் தேவைகளையும் தவிசாளர்ரிடம் பட்டியலிட்டு சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக கடந்த யுத்தத்தினால் 1998 முதல் 2003 வரையுள்ள காலப்பகுதிக்குள் இரானுவமுகாமாக இருந்த துறைநீலாவணை நூலகத்திற்கு இரண்டுமாடிக்கட்டடித்துடன் கூடியதும், நவீன வசதிகளுடனும் கூடிய தரமான பொதுநூலகத்தை அமைத்து தருமாறும், நூலகத்திற்கு சுற்றுமதில்கள் அமைத்தல், வாசகர்களின் நன்மை கருதி தரமான மலசலக்கூடம் அமைத்தல், குடிநீர், குடிநீர்வசதிகளை ஏற்படுத்தல், துறைநீலாவணையில் உள்ள பாடசாலைகளுக்கும், பாலர் பாடசாலைகளுக்கும், ஆலயங்களுக்கும் திண்மத் தொட்டிகளை வழங்குமாறும், துறைநீலாவணை கிராமத்தில் உள்ள பிரதேச வீதிகளுக்கு கொங்கிறீட் இடல், வடிகால் அமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் வீதிகளுக்கு பெயர்பலகையிடல், உள்ளூர் வீதிகளை அகலப்படுத்தல், மின்சார உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல், மின்சார மீள்புனரமைப்பு வேலையின்போது கிராமத்தில் பொருத்தப்பட்ட தெருவிளக்கு மின்சாரசபையால் கழற்றப்பட்டதை (தெருவிளக்கை) மீளப்பொருத்துதல், துறைநீலாவணையில் உள்ள சனசமூகங்களை மீள்புனரமைத்தல், துறைநீலாவணையில் முறையான திண்மக்கழிவகற்றலை மேற்கொள்ளல், உள்ளிட்ட பல்வேறு விடயங்களை நிறைவேற்றித்தருமாறு எடுத்துரைக்கப்பட்டன.
இதனை ஏற்றுக்கொண்ட தவிசாளர் பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வுகளின் போது துறைநீலாவணை கிராமத்தின் குறைபாடுகளையும், பொதுநூலகத்தின் தேவைகளையும், குறைபாடுகளையும் சபை அமர்வுகளில் உறுப்பினர்கள் மத்தியில் ஆழமாக அலசி ஆராயப்பட்டு தீர்வுகள் எட்டப்படுமென பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.
பொதுமக்களின் வாக்குப்பலத்தாலும், ஒத்துழைப்பாலும் தெரிவு செய்யப்பட்ட நான் பொதுமக்களின் தேவைகளையும், குறைபாடுகளையும் நிறைவேற்றிக் கொடுப்பதில் பின்னிற்க மாட்டேன். பிரதேச சபையின் பரிபாலனத்தின் கீழுள்ள சகல கிராமத்தின் தேவைகளையும், பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளையும் கட்சி, பிரதேச வேறுபாடின்றி நான் செய்து கொடுப்பேன்.
குறிப்பாக வீதி புனரமைப்பு, வடிகால் அமைப்பு வசதிகள், சுகாதார வசதிகள், குடிநீர்வசதிகள், திண்மக்கழிவகற்றல், சனசமூக புனரமைப்புக்கள், கட்டாக்காலி மாடுகள் பிரச்சனை உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணப்பட்டு எம்மக்களின் துயர்துடைப்பேன் என தவிசாளர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment