இயற்கையாகவே நீர் வழிந்தோடும் தோணாக்கள் எனப்படுகின்ற நீரோடைகள் மனித நில அபகரிப்புக்களால் காணாமல் போவதை தடுத்து நிறுத்தக்கோரி மாபெரும் கையெழுத்து வேட்டையொன்று ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசத்திலுள்ள மீராகேணி கிராமத்தில் அங்குள்ள இளைஞர்களால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
“ஏறாவூர்ப் பற்றுப் பகுதியில் காணப்படும் நீர் தோணாக்களைப் பாதுகாப்போம்” என்ற உத்வேகத்துடன் ஞாயிற்றுக்கிழமை 01.04.2018 ஆரம்பமான தோணாக்களைப் பாதுகாக்கும் கையெழுத்து வேட்டையில் கிராமத்தவர்கள் மற்றும் இயற்கை நேசர்கள் கையெழுத்திட்டனர்.
இந்தப் பிரதேசங்களில் பூர்வீகமாக இருந்து வந்த இயற்கை வழி நீர் வழிந்தோடுமிடங்கள் மனித மண் அபகரிப்பு மற்றும் காணி அபகரிப்பு நடவடிக்கைகளினால் மறைந்து போயுள்ளதாகவும் இதனால் வெள்ளம், வற(ர)ட்சி போன்ற பல்வேறு பாதிப்புக்களுக்கும் தொற்று நோய்களுக்கும் தமது பிரதேசம் உள்ளாகி வருவதாகவும், இயற்கையின் பல்லினத் தன்மை பாதிப்பும் சூழல் மாசுபாடு ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தோணாக்களைப் பாதுகாக்கும் தமது முன்னோடி முயற்சிக்காக முதற்கட்டமாக சுமார் 5000 ஆர்வலர்களின் கையெழுத்துக்களைப் பெற்று அவற்றை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment