ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி இராணுவ ஆர்ட்டிலறி பிரிவை ஸ்தாபிப்பதற்காக எடுக்கப்படும் இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தக்கோரி, விடயம் பிரதம மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானாவின் இணைப்பாளருமான ஏ.சி.எம். ஷயீட் தெரிவித்தார்.
இது விடயமாக ஞாயிறன்று 01.04.2018 மேலும் தெரிவித்த அவர், ஏறாவூர் புன்னைக்குடா பிரதேசத்தில் பொhதுமக்களுக்குச் சொந்தமான சுமார் 25 ஏக்கர் காணிகளைக் கையகப்படுத்தி இராணுவ ஆர்ட்டிலறி பயிற்சி முகாம் அமைப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபட்டுள்ளதாக அக்காணிகளின் சொந்தக் காரர்கள் எமது கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா மற்றும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து சனிக்கிழமை 31.03.2018 பிற்பகல் அவர்கள் சர்ச்சைக்குரிய இடத்திற்கு உடனடியாக வருகை தந்து நிலைமைகளைப் பார்வையிட்டதோடு இது குறித்து இராணுவ மற்றும் அரச உயர்மட்ட அதிகாரிகளிடமும் தமது அதிருப்தியை வெளியிட்டனர்.
மேலும், இவ்விடயம் குறித்து கொழும்பு சென்று நேரடியாக பிரதம மந்திரியின் கவனத்திற்குக் கொண்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களிடம் உறுதியளித்தனர்.
குறித்த புன்னைக்குடா பிரதேசத்தில் காணி அபகரிப்பு இடம்பெறுவதாக கூறப்பட்டு வந்த பல்வேறு இனவாத சர்ச்சைகளின் அடிப்படையில் அப்பகுதியில் அரச காணிகளை அளந்து அடையாளமிடும் நடவடிக்கைகள் இடம்பெற்றதும் காணி அதிகாரி ஒருவர் சுடப்பட்டதான வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்ற வேளையில் தற்போது இவ்வாறு மீண்டும் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
உண்மையில் குறித்த காணிகளைச் சூழவுள்ள பகுதிகளில் அதிகளவான அரச காணிகள் இருக்கின்ற தறுவாயில் பொதுமக்களின் காணிகளை அபகரிக்க மறைமுகமாகவும் நேரடியாகவும் நடவடிக்கை எடுப்பது இனவாத தூண்டுதல்களாகவே நோக்க வேண்டியுள்ளது.
மேலும், தமிழ் முஸ்லிம் பொதுமக்கள் மிக அடர்த்தியாக வாழும் ஏறாவூர் நகரமும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் பொதுமக்களின் காணிகளைக் கையகப்படுத்தி இராணுவ பயிற்சி மையங்களை நிறுவுவது பொருத்தமற்றதும் குழப்பமான நிலைமையுமாகும்.
ஏற்கெனவே ஏறாவூர் நகர பிரதேசம் சுமார் 8 சதுர கிலோமீற்றர் பரப்பளவுக்குள் சுமார் 15 ஆயிரம் குடும்பங்களுடன் இட நெருக்கடியில் திணறுகிறது.
ஆயினும், அவர்களுக்கு காணி கிடைப்பதென்பது ஒரு கனவாகவே இருந்து வருகின்றது.
இது ஒரு சமூகப் பிரச்சினையாகவும் மனிதாபிமான நெருக்கடியாகவும் உருவெடுத்துள்ளது. அத்துடன் சுகாதார ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் நெருக்கடியை இங்கு வாழும் காணியற்ற மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றார்கள்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகப் பிரிவுடன் இணைந்ததாக உள்ள ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவில் போதியளவு காணிகள் உள்ள அதேவேளை அருகில் வாழும் இந்த மக்கள் காணியற்றவர்களாக அந்தரிக்க விடப்பட்டிருப்பது ஒரு மனிதாபிமான நெருக்கடியாகவும் பார்க்கப்பட வேண்டியுள்ளது.
எனவே, இது குறித்து உடனடியாக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி ஜனாதிபதி, பிரதம மந்திரிக்கும் அறிவிக்கும் வகையில் உடனடியாக காணி வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதேவேளை, சுமார் 3500 குடும்பங்கள் வசிப்பிடக் காணியற்றவர்களாக அவஸ்தைப்படுகின்ற நிலைமையில் இருக்கும் காணிகளையும் அபகரிக்க முயற்சிக்கும் இத்தகைய இனவாத நெருக்கடிகள் இன்னமும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கக் கூடும் என்பதால் இப்பிரச்சினை உடனடியாகத் தீர்த்து வைக்கப்பட்டு இராணுவம் கையகப்படுத்த உத்தேசித்திருக்கும் காணிகளில் பொதுமக்கள் மீண்டும் தமது நடடிவக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்” என்றார்.
0 Comments:
Post a Comment