27 Apr 2018

மட்டக்களப்பில் 22 குடும்பங்களுக்கு ரணவிரு சேவையின் கீழ் இரண்டாம் கட்ட வீடுகளைப் பெறுவதற்கு காணிகள் இல்லை.

SHARE
ரணவிரு சேவையின் கீழ் வீடுகளைப் பெறத் தகுதி பெற்ற மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 22 குடும்பங்களுக்கு வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்கு காணிகள் அற்ற நிலையில் உள்ளது கவலையளிப்பதாக ரணவிரு சேவா அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
“ரணவிரு சேவா” குடும்பங்களின் நலன்புரி மாதாந்தக் கூட்டம் வியாழக்கிழமை 26.04.2018 மட்டக்களப்பு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபொழுது அவர் இந்த விடயங்களைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமில்லாமல் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் படையிலும், பொலிஸ் கடமையிலும் இணைந்திருந்து தங்களைத் தியாகஞ் செய்தவர்களின் குடும்ப நல்வாழ்வாழ்வுக்காக ரணவிரு சேவா அதிகார சபை செயலாற்றி வருகின்றது.
அக்குடும்பங்களின் நல்வாழ்வுக்காக அடிப்படை வசதியாக வீடுகள் நிருமாணித்துக் கொடுக்கப்படுகின்றன.

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் “ரணவிரு சேவா” பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்காக ஏற்கெனவே ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த வீடுகளை  நிருமாணிக்கும் திட்டம் கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.

இதன் அடுத்த கட்டமாக வீடற்ற ரணவிரு சேவா குடும்பங்களுக்கு 56 வீடுகள் நிருமாணித்துக் கொடுக்கப்படவுள்ளன.

அவ்வீடுகளைப் பெறுவதற்கு அடிப்டைத் தகுதியாக வீடுகளை நிருமாணிப்பதற்குத் தேவையான இட அமைவுடன் கொண்ட காணிகள் தேவை.
எனினும், இக்காணிகளைப் பெறுவதற்கு முடியாத நிலையில் 22 குடும்பங்கள் இருக்கின்றர்கள்.
எவ்வாறேனும் அவர்கள் வீடமைப்பதற்கான காணிகளைப் பெற்றுக் கொண்டு தங்களது வீடுகளை நிருமாணித்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

மேலும், ஏற்கெனவே ரூபாய் 22 இலட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைந்த வீடுகளை நிருமாணித்துப் பூர்த்தியாக்கியுள்ளவர்களுக்கு விசேட தேவைகள் ஏதுமிருப்பின் சுமார் 3 இலட்ச ரூபாய் இலகு வட்டியுடனான கடன் வசதி பெறுவதற்கும் ஏற்பாடு செயயப்பட்டுள்ளது.

எனவே, இந்த நலன்புரி வசதிகளை ரணவிரு சேவா குடும்பங்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப், அதன் உப செயலாளர் எச்.எம். மன்சூர், பொருளாளர் ஏ. லிங்கராஜா உட்பட ரணவிரு பயனாளிக் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


SHARE

Author: verified_user

0 Comments: