27 Apr 2018

திருடப்பட்ட 10 முச்சக்கரவண்டிகள் ஒரு மோட்டார் சைக்கிள் என்பனவற்றுடன் மாகாணத் திருட்டுக் கும்பல் கைது

SHARE
கிழக்கு மாகாணத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கன கச்சிதமாகப் கைப்பற்றிச் செல்லும் திருட்டுக் கும்பலொன்றைத் தாம் கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் நிந்தவூர் பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது காணாமல் போன, முச்சக்கர வண்டி தொடர்பாக பொலிஸார் புலனாய்வு விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக சம்மாந்துறைப் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று, சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் இருந்து, 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து 10 முச்சக்கர வண்டிகளும், ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டன.

கைப்பற்றப்படட முச்சக்கர வண்டிகள் அனைத்தும் அவற்றின் இயந்திர மற்றும் அடிசட்ட இலக்கங்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டிகளின் பதிவு இலக்கங்களும் மாற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திர மற்றும் அடிச்சட்ட இலக்கங்களை மாற்றியமை மற்றும் திருட்டு ஆகியவை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களும் சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எச்.எம். நஸீல்  முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது அவர்களை எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இத்திருட்டுக்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட ரீதியில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE

Author: verified_user

0 Comments: