காத்தான்குடியிலும் ஹர்த்தால் கடையடைப்பு இயல்பு வாழ்க்கை பாதிப்பு போக்குவரத்துக்கு பாதிப்பில்லை அரச அலுவலகங்கள் இயங்கின
கண்டி மாவட்டத்தின் திகன, தெல்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்புத் தெரிவுக்கும் முகமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரான காத்தான்குடியில் செவ்வாய்க்கிழமை 06.03.2018 ஹர்த்தால் கடையடைப்பு இடம்பெற்றுள்ளது.
முன்னதாக ஹர்த்தாலுக்கான அழைப்பு இரவோடிரவாக ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி பிரதான வீதியில் டயரைப் போட்டு எரித்த நபர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்திருந்தனர்.
செவ்வாய்க்கிழமை காலை 06.03.2018 இடம்பெற்ற இச்சம்பவத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இயல்பு நிலையைக் குலைத்து வன்முறைகளைத் தூண்ட முற்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றதாகவும் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை காத்தான்குடி நகரில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட போதும் அரச அலுவலங்கள், பாடசாலைகள், உள்ளுர மற்றும் தூர இடங்களுக்கான போக்குவரத்துச் சேவைகள் என்பன வழமை போல் இயங்கின.
பிரதேசத்தில் வன்முறைகள் ஏதும் நிகழாவண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment