6 Mar 2018

சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் 32வது ஆண்டு நினைவஞ்சலி அனுஷ்டிப்பு

SHARE
மட்டக்களப்பு, வவுணதீவில்வைத்து விஷேட அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 32 வது ஆண்டு நினைவஞ்சலி அனுஸ்டிப்பு வவுணதீவு பொதுக் கட்டிட மண்டபத்தில் செவ்வாய்கிழமை  (06) நடைபெற்றது.
ஊடகவியலாளர்களும் வவுணதீவு மக்கள் அமைப்புக்களும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த மேற்படி அஞ்சலி அனுஸ்டிப்பில், மறைந்த ஊடகவியலாளர் இரத்தினசிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அன்னாரின் நினைவுப் பேருரைகளும் இடம்பெற்றது.


ஊடகவியலாளர்  இரத்தினசிங்கம் கடந்த 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி கரடியனாற்றில் முகாமிட்டிருந்த விசேட அதிரடிப்படையினரின் வவுணதீவு பிரதேசத்தில் மேற்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இவர் கடந்த 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வீரகேசரியின் நிருபராக இருந்துகொண்டு இப் பிரதேசம் உட்பட மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரச்சனைகள், மக்களின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட அனைத்துச் செய்திகளையும் பத்திரிகைவாயிலாக வெளிக்கொண்டு வந்தவராவார்.

இவர் தனது எழுத்தின் மூலம் கீழ் மட்டத்திலுள்ள மக்களையும், கிராமங்களையும் உயர்த்தும் வண்ணம் அரசாங்கத்திற்கு  சில விடயங்களை சுட்டிக்காட்டியவாறே தனது ஊடகப் பயணத்தை தொடர்ந்தவராவார். அந்த காலகட்டத்தில் பல சம்பவங்களையும், மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளையும் துணிச்சலுடனும் துடிப்புடனும் எழுதுவதில் ஊடகவியலாளர் இரத்தினசிங்கம் முன்னிலையில் செயற்பட்டவராவார்.  





 

SHARE

Author: verified_user

0 Comments: