மட்டக்களப்பு வாகரையில் கத்தோலிக்கர் அல்லாத வேறு கிறிஸ்தவ சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்ட 2 ஏக்கர் விஸ்தீரணமான அரச காணியை பிரதேச பொதுமக்கள் ஒன்றுகூடி வியாழக்கிழமை 01.03.2018 சிரமதானம் செய்ததாக மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும் கத்தோலிக்கருமான ரீ.ஜீ. குருகுலசிங்கம் தெரிவித்தார்.
வாகரைப் பிரதேசத்தில் கத்தோலிக்கர் அல்லாத வேறு சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோர் மரணிக்கும்பட்சத்தில் அவர்களை வாகரைப் பிரதேசத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுக்கப்படும் கொந்தளிப்பான சூழ்நிலை கடந்த பல வருடங்களாக இருந்து வந்தது.
கத்தோலிக்கர் அல்லாத வேறு சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோரின் உடல்களை அடக்கம் செயய்வதற்கு மயானம் இல்லாத பிரச்சினைக்குத் தீர்வு காணும் முகமாக வாகரை வடக்கு கிராம சேவையாளர் பிரிவிலுள்ள கணுக்காமடு பகுதியில் 2 ஏக்கர் விஸ்தீரணமான அரச காணி சமீப சில நாட்களுக்கு முன்பாக ஒதுக்கப்பட்டுள்ளதாக வாகரை உதவிப் பிரதேச செயலாளர் அருளானந்தம் அமலினி அறிவித்திருந்தார்.
அதனடிப்படையில் காடு மண்டிக் கிடந்த குறித்தொதுக்கப்பட்ட காணியை பிரதேசத்திலுள்ள கத்தோலிக்கர் அல்லாத வேறு சபைப் பிரிவுகளைப் பின்பற்றும் பிரதேசத்திலுள்ள பொதுமக்கள் ஒன்று கூடி சிரமதானத்தை மேற்கொண்டனர்.
இந்த சிரமதான நிகழ்வில் மாவட்ட சர்வமத ஒன்றியத்தின் செயற்பாட்டாளரும் கத்தோலிக்கருமான ரீ.ஜீ. குருகுலசிங்கம் உட்பட கத்தோலிக்கரல்லாத வேறு சபைப் பிரிவுகளின் போதகர்கள், கன்னியாஸ்திரிகள் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
இன்று தொடக்கம் தமது சபைப் பிரிவுகளைப் பின்பற்றுவோர் மரணிக்கும்பட்சத்தில் அதிக தொலைவிலுள்ள வேறு ஊர்களுக்கு சடலங்களை எடுத்துச் சென்று அடக்கம் செய்யும் நிலைமை இல்லாது போய் தமது சொந்த ஊரிலேயே அடக்கம் செய்ய வாய்ப்புக் கிட்டியிருப்பது தமக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேசத்தில் வாழும் கத்தோலிக்கரல்லாத வேறு சபைப் பிரிவுகளைப் பின்பற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments:
Post a Comment