1 Feb 2018

வீட்டுக் கதவை தட்டுமுன் விழித்துக் கொள்ளுங்கள் மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் கனகசபை சுதர்சன்

SHARE
“போதைப் பொருள் பாவனையால் நாடும் வீடும் சீரழிவதை அனுமதித்து வன்முறையாளர்கள் வீட்டுக் கதவைத் தட்டுவதற்கு முன் விழித்துக் கொள்ளுங்கள்” என மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களில் இருந்து குடிமக்களைக் காப்பதற்காக தாம் பலவகையான சமுதாய விழிப்பூட்டல்களைச் செய்து வருவதாக  மட்டக்களப்பு சமுதாயஞ்சார் சீர்திருத்த உத்தியோகத்தர் (Community Correction Officer)      கனகசபை சுதர்சன் புதன்கிழமை  (31.01.2018)  தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக “இந்த தேசத்திற்கு நீங்கள் உதவி செய்ய விரும்புகின்றீர்களா? என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது பிரதேசத்தின் போதைப் பொருள் பாவினையைக் குறைப்பதில் நீங்கள் பங்காளர்களாக விரும்புகின்றீர்களா? நாளை போதைப் பொருள் பாவனையாளர்கள் வன்முறைக்காக உங்கள் வீட்டுக் கதவையும் தட்டலாம் என்பதை உணர்கிறீர்களா? இதனால் உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரன், சகோதரி மற்றும் உற்றார் உறவினர் பாதிக்கப்படப் போகின்றார்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா?

அப்படியானால் போதைப் பொருள் பாவனையைக் குறைக்க நீங்கள் மிகுந்த அவதானத்தோடு இருக்க வேண்டும், உங்கள் கணவன், மனைவி, பிள்ளைகள், சகோதரன், சகோதரி, உற்றார் உறவினர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையானதன் நெறி பிறழ்வு பற்றி விழிப்பாக இருங்கள்.

போதைப் பொருள் பாவனையாளர்களின் தொல்லைகளை நீங்கள் அனுபவிக்கிறீர்களா?

அவர்கள் வன்முறையின் விளிம்பில் இருக்கிறார்களா?
அவர்கள் உங்கள் உறவினர் என்றாலும் அதனை இரகசியமாகக் கையாண்டு அவர்களை மீட்டெடுக்க வழியுண்டு.

அதுபற்றி விழிப்பாக இருந்து எமக்கு அறியத் தாருங்கள். மட்டக்களப்பு சமதாயஞ்சார் சீர் திருத்தத் திணைக்களத்தின் 065 2228496 என்ற இலக்கத்துடனோ அல்லது 0774004984 என்ற இலக்கத்துடனோ அழைக்கலாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.  

மேலும் தெரிவித்த அவர் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்ட சிறு குற்றவாளிகளாக இனங்காணப்பட்டோர் நெறிப்படுத்தப்பட்டு மீண்டும் சமுதாய நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அவர்கள் நீதி மன்ற உத்தரவின் பிரகாரம் சமுதாயஞ்சார் சமூக நல சிரமதானப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்ற அதேவேளை புதிதாக வன்முறைகளுக்குள்ளும் சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடாமலிருப்பதற்காக நாம் பல்வேறு விழிப்பூட்டல்களைச் செய்து வருகின்றோம்.

சமூக மட்ட  சட்ட விரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக  இந்த சிறு குற்றவாளிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமூக நெறிப்படுத்தலுக்கான பல்வேறு விழிப்புணர்வூட்டல்கள் இடம்பெற்று வருகின்றன.

சிரமதானப் பணிகளுடன், உளநல ஆற்றுப்படுத்தல் பயிற்சி, ஆன்மீக தியானம், தொழினுட்பப் பயிற்சிகள், புனர்வாழ்வு, வைத்தியம் என்பன சிறு குற்றவாளிகளை சமுதாய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நிகழ்ச்சித் திட்டங்களாகும் என்றும் அவர் கூறினார்.

SHARE

Author: verified_user

0 Comments: