30 Jan 2018

கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவால் கொலை செய்யப்பட்ட பிறேமினிக்கு நீதி வேண்டி அணிதிரள்வோம்! மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரம்

SHARE
கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவால் கொலை செய்யப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக (ரீ.ஆர்.ஓ) பணியாளரும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவியுமான  தனுஸ்கோடி பிறேமினிக்கு நீதி வேண்டும் எனக் கோரி கிழக்கு ஒன்றிணைந்த தமிழ் பெண்கள் அமைப்பு என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாகங்களிலும் துண்டுப் பிரசுரம் திங்கட்கிழமை 29.01.2018 வெளியிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, வெலிக்கந்தை இராணுவ முகாமை அண்டிய பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால்  கடந்த 2006 தை மாதம் 29ஆம் திகதி இவர் கடத்திச் செல்லப்பட்டார், இவர் கடத்தப்பட்டு 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

இவரின் கொலைக்கு நீதி விசாரணை எதுவும் இதுவரை இடம்பெறவில்லை,  இவரின் கொலைக்கு நீதி விசாரணைகள் வேண்டும் என அத் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 'பூனைக்கு மணி கட்டுவது யார் என்று ஓடாதீர்கள், எல்லோருக்கும் இவள் சகோதரி - மகள், இங்கே என்ன நடக்கிறது பாதகத்திற்கு பொறுப்பானவர் புத்தகம் எழுதுகிறாராம் புத்தகப் பக்கங்களில் எங்களைக் கவனியுங்கள் இந்தப் பாதகத்திற்கும் ஏதாவது சமாதானம் சொல்லும் பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கலாம்"
'வித்தியாவுக்கு அநீதி இழைக்கப்பட்டபோது வீதியில் இறங்கி நீதி கேட்டீர்கள், கிருசாந்திக்கு நடந்த கொடூரத்திற்கு குரல்கொடுக்க பலர் இருந்தனர் இந்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவி தனுஸ்கோடி பிறேமினிக்கு நீதி கேட்க யாரும் இல்லையா?. மார்ச் 8ஆம் திகதி வரை காத்திருக்க வேண்டாம், இப் பாதகச் செயலுக்கு நீதியை நிலைநாட்ட அடியெடுத்து வையுங்கள்". போன்ற விடயங்களும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளன.

மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு கணக்கியல் தொடர்பான பயிற்சிநெறி வகுப்பில் கலந்துகொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலிருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்தபோதே வெலிக்கந்தையில் வைத்து ஆயுதக் குழுவினரால் கடத்தி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு இறுதியில் கோடரியால் கொத்திக் கொலை செய்யப்பட்டு புதருக்குள் தூக்கி வீசப்பட்டார் என்றும் அந்தப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: