16 Jan 2018

உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும். போரதீவுப்பற்று பிரதேச சபை சுயேட்சை தலைமை வேட்பாளர் வி.ஆயுஷ்மன்

SHARE
(பழுகாமம் நிருபர்)

உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும் என்பதை எம்மின அரசியல் தலைவர்கள் உணரும் வரை எமது வலியும் வேதனையும் அவர்கள் மனங்களை உறுத்தி அவர்கள் ஒற்றுமையாய்ச் செயற்பட முன்வரும் வரை அவர்களுக்கு ஓய்வளித்து தற்காலிகமாகவேனும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சுயேச்சை வழியில் ஒன்றிணைவோம் என போரதீவுப்பற்று பிரதேச சபையில் சுயேட்சை குழு 02 இல் போட்டியிடும் பழுகாம வட்டார வேட்பாளரும், தலைமை வேட்பாளருமான வி.ஆயுஷ்மன் தெரிவித்துள்ளார். நேற்று(15) பழுகாமத்தில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் உரையாற்றுகையில்,
எம் தேசத்தில் கடந்த காலங்கள் எமக்குத்தந்த படிப்பினைகளைச் சிந்தையில் இருத்தி தெளிவாக எதிர்காலத்தை திட்டமிடுவோம். ஈழத்தமிழர் பிரச்சினையில் சர்வதேசமும் ஆளும்வர்க்கமும் இதர கட்சிகளும் அக்கறையின்றி செய்ற்பட்டு வருவது கண்கூடு. மக்களின் தேவைகள், அபிலாசைகளைப் புரிந்து நடந்தவர்கள் யார் ?
எம்மவரின் இறுதி நம்பிக்கையாக இருந்த கட்சியும் மக்கள் நலம் சார்ந்த தீர்வை முன்னிலையாய்க் கொள்ளாது தமது உறுப்பினர்களின் நலம் சார்ந்தும் தங்களது அதிகாரத் தலைமைகளை வளர்த்துக் கொள்ளவும் தமிழர் பகுதிகளை பங்கீடு செய்து துண்டாடி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி மனப்பாங்கிலும் முழுநேரத்தைச் செலவிட்டு தமிழர் விரோத சக்திகளுக்குச் சோரம் போய் எமது இன ஒற்றுமையினை சீர்கெடுத்து எமக்கு களங்கத்தை பரிசளித்திருக்கின்றனர் எனவும், 

அரசியல் யாப்பின் அடிப்படை அலகான உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் நீங்கள் நன்கு அறிந்த ஒருவரை உங்களுக்குச் சேவையாற்றுவார் என எதிர்பார்க்கும் ஒருவரை எமது கிராமத்தின் துடிப்புள்ள ஒருவரை கட்சியை எதிர்பார்க்காமல் சின்னத்தின் வழி உணர்ச்சிவசப்படாமல் பசப்பு வார்த்தைகளை நம்பாமல் கிராமத்தை வளப்படுத்தும் முனைப்புடன் செயற்படும் ஒருவரை நீங்கள் தெரிவு செய்ய முன்வரவேண்டும். காலம் காலமாய் கனிவான பேச்சுடனும் பொய்யான உறுதிமொழிகளையும் நடக்காத, நடைமுறைக்குதவாத தேர்தல் விஞ்ஞாபனங்களையும் கூறி எம்மக்களின் பொன்னான வாக்குகளால் அரியாசனம் ஏறி அவரவர் விருப்பத்திற்கும் சுயலாபத்திற்காகவும் ஆண்டனுபவித்தார்களே தவிர குறிப்பிடும்படியாக மக்கள் நலன் கருதி ஏதும் செயற்பட்டார்களா என்றால் இல்லை இறுதியில் எங்களை அரசியல் அனாதைகளாக மாத்திரம் ஆக்கியிருக்கின்றார்கள்.

உரிமை மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட இனம் ஒற்றுமையினால் மாத்திரமே தலைநிமிர முடியும் என்பதை எம்மின அரசியல் தலைவர்கள் உணரும் வரை எமது வலியும் வேதனையும் அவர்கள் மனங்களை உறுத்தி அவர்கள் ஒற்றுமையாய்ச் செயற்பட முன்வரும் வரை அவர்களுக்கு ஓய்வளித்து தற்காலிகமாகவேனும் எம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள சுயேச்சை வழியில் ஒன்றிணைவோம். கடந்தகால அபிவிருத்தித் திட்டங்களில் ஊழல் புரிந்தவர்களை மீளத்தெரிவு செய்து மீண்டும் தவறிழைப்பதா? இவற்றை எல்லாம் இல்லாமல் செய்து ...

மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுவதற்கு, ஆர்ப்பரிப்பற்ற அமைதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, மக்களின் தேவையறிந்து வளங்களை பெற்றுக்கொடுப்பதற்கு, பிறர் தவறவிட்ட விடயங்களை தவறாமல் நிறைவேற்றுவதற்கு துடிப்பான இளைஞர், யுவதிகளுக்கு இடம்கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.




SHARE

Author: verified_user

0 Comments: