தேர்தல் ஆணைக்குழுவின் சட்டதிட்டங்களை மதித்து மக்களுக்கும் அரசாங்க மற்றும் தனியார் சொத்துக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாதவண்ணம் கலகமற்ற, சுமூகமான முறையில் இந்த தேர்தலை நடாத்துவதற்கு வேட்பாளர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பீ.ரி. நஸீர் தெரிவித்தார்.மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் வைத்து தேர்தல் சட்டங்கள் தொடர்பில் திங்கட்கிழமை 31.12.2017 வேட்பாளர்களுக்கும் மக்களுக்கும் தெளிவூட்டும் வகையில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் குறிப்பிடுகையில், வேட்பாளர்கள் சிவில் சமூகத்தினர் அனைவரும் இந்த தேர்தலை ஜனநாயக கௌரவத்துடன் கலகங்கள் எதுவுமின்றி நடத்த உதவவேண்டும்.
அவ்வாறில்லாமல் தேர்தல் பிரச்சாரங்களின்போது பாதுகாப்பு தரப்பினரையும் பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் எந்வொரு செயற்பாட்டுக்கும் எதிராக பொலிஸார் பாரபட்சமின்றி நடவக்கை எடுப்பார்கள்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக கட்சிகளின் அல்லது சுயேட்சைக் குழுக்கள் காரியாலயங்கள் திறப்பதாயின், உரிய தேர்தல் சட்டதிட்டங்களின்படி பதிவு செய்யப்பட்டு அனுமதியைப் பெற்றபின் அதனை திறக்க வேண்டும்.
திறக்கப்பட்டுள்ள தேர்தல் காரியாலயங்கள் எந்நேரமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் அவை பதிவு செய்யப்படவில்லை எனக் கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிரச்சாரத்தின் பொருட்டு பலாத்காரமாக மதில்களில் அல்லது வேலிகளில் போஸ்டர்ஸ் ஒட்டுவது தண்டனைக்குரிய விடயமாகும். மற்றும் வாகனங்களில் ஒலிபெருக்கிகளைக் கட்டிக் கொண்டு வீதிகளில் சென்று பிரச்சாரம் செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.
எந்த வேளையிலும் மக்களுக்கு இடைஞ்சலாக இருக்கும் வகையில் பிரச்சாரங்களும் பிரச்சார அமைவிடங்களும் தடைசெய்யப்படும். எந்தத் தெருக்களிலும் போக்குவரத்தை தடைசெய்யும் வகையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளலாகாது.
கட்சிகளோ சுயேட்சைக் குழுக்களோ கூட்டங்கள் நடத்தவேண்டுமாயின் குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னர் அக் கூட்டத்திற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரங்களின் பொழுது கையூட்டல் வழங்குதல், பொருட்களை பகிர்ந்தளிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
மோதல்கள் வன்முறைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் மக்களுக்கும் அரச தனியார் சொத்துக்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாவண்ணம் தேர்தல் திணைக்களம் இவ்வாறான கட்டுப்பாடுகளையும் விதிமுறைகளையும் விதித்துள்ளது, இதற்கு வேட்பாளர்களும் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். என தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment