புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தலில் வாக்காளர்கள் பாரம்பரிய முறைப்படி வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமல் அரசியல்வாதிகளைத் தரம்பிரித்து புள்ளிகள் அதனடிப்படையில் ஆதரவைத் தெரிவிக்குமாறு மார்ச் 12 எனும் ஜனநாயக விழிப்புணர்வு இயக்கம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட மார்ச் 12 இயக்க விழிப்புணர்வுக் கையேடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “கட்சிக்காரராக அல்லாமல் நாட்டுப் பிரஜை என்ற ரீதியில் சிந்தியுங்கள், தனியாகவும் கூட்டாகவும் அணிசேருங்கள், நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக செயற்படுங்கள்” என்றும் பிரதேச நகர மாநகர சபைக்கு கட்சி மற்றும் நிறத்தைப்’ பற்றிக் கருத்திற் கொள்ளாது பொருத்தமானவர்களை மாத்திரமே தெரிவு செய்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவிடமாக அந்த இயக்கம் அரசியல்வாதிகளுக்கு அவர்களது தகைமை, தராதரம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு வாக்களிக்க முன் புள்ளிகள் வழங்கி முன்னுரிமைப்படுத்துமாறு கேட்டு அட்டையொன்றையும் பரவலாக விநியோகித்துள்ளது.
அரசியல்வாதிகளுக்குப் புள்ளிகள் வழங்கும் அந்த அட்டையில் பல விடயங்களை கருத்திற் கொள்ளுமாறு மார்ச் 12 இயக்கம் கேட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அன்பார்ந்த பிரசைகளே! நீங்கள் இம்முறை உங்கள் கிராமத்திற்கு உங்களுக்கெ உரிய பிரதிநிதியைத் தெரிவு செய்யும் தேர்தலில் பங்கெடுக்கவுள்ளீர்கள். இந்தத் தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவின்படி உங்கள் கிராமம் மற்றும் நகரத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
ஆகவே, பெறுமதியான உங்கள் வாக்கினை அளிப்பதற்கு முன்னர் நீங்கள் தெரிவு செய்யப்போகும் பிரதிநிதியை சரியாக இனம் கண்டு கொள்ளுங்கள்.
உங்கள் வட்டாரத்தில் போட்டியிடும் கட்சியொன்றின் அல்லது சுயேச்சைக் குழுவின் வேட்பாளர் நியாயமான முறையில் பணம் சம்பாதிப்பவரா? அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக் கூடியவரா? இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரா? அலுவல்களை முடிப்பதற்காக உங்களால் இலகுவில் சந்திக்கக் கூடிய நெருக்கமான நட்புள்ளவரா? சுற்றாடலுக்குத் தீங்கு ஏற்படுத்தாதவரா? சமூக சேவையாற்றக் கூடிய அர்ப்பணிப்புள்ளவரா? அனைத்து இன மத கலாசாரங்களை மதிப்பவரா? என்ற கேள்விகளுக்கு மிக நன்று, நன்று, சாதாரணம், பலவீனம் என்ற அடிப்படையில் 0 இல் இருந்து 10 வரை புள்ளிகள் இட்டு அதிகூடிய புள்ளிகளைப் பெறும் அபேட்சகரை உங்கள் உறுப்பினராகத் தெரிவு செய்யுங்கள்.
சாதுரியமாகச் செயற்பட்டு தகுதியான வேட்பாளரைத் தெரிவு செய்து பிரதேசத்தை அபிவிருத்தி செய்யுங்கள்.
உங்கள் வாக்கிற்கு பெறுமதி கிடைக்க வேண்டுமெனில் வாக்களிக்க மன் பல முறை சிந்தியுங்கள்.” என்று கேட்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 ஜனநாயக விழிப்புணர்வு இயக்கத்தினால் வெளியிடப்பட்ட “புதிய உள்ளுராட்சி அதிகார சபைத் தேர்தல் முறையுடன் புதிய அரசியல் கலாசாரமொன்றைக் கட்டியெழுப்புவோம்” சிந்தியுங்கள், அணிசேருங்கள், செயற்படுங்கள்” என்ற கையேடுகளும் பொதுமக்கள் உட்பட அதிகாரிகளுக்கும் ஏற்கெனவே விநியோகிக்கப்பட்டன.
உள்ளுராட்சித் தேர்தல் முன்னெடுப்புக்களில் பொதுமக்களின் முழுமையான விழிப்புணர்வும் பங்குபற்றலும் மிக அவசியம் என்பதால் இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளதாக அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment