மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுமிகள் இளவயதுக் கர்ப்பத்தைத் தவிர்த்துக் கொள்வதற்கான விழிப்புணர்வுகளை தாம் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் நடாத்தி வருவதாக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்புன் நிஸா றியாஸ் தெரிவித்தார்.
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் ஒத்துழைப்புடன்“மகிழ்ச்சியான குடும்பம்” எனும் செயற்திட்டத்தின் கீழ் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பால்ய வயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம், சிறுவர் தற்கொலைகள் என்பனவற்றைத் தடுக்கும் வகையிலமைந்த இவ்வாறானதொரு விழிப்புணர்வுச் செயற்பாடு புதன்கிழமை 27.12.2017 மட்டக்களப்பு வாகரை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவிலுள்ள பால்சேனைக் கிராமத்தில் இடம்பெற்றது.
கிராம மக்கள், பெற்றோர், சிறுவர் சிறுமியர், பாடசாலை இடைவிலகியோர் மத்தியில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் செயற்பாடுகளினூடாகவும் காட்சிகள் மூலமாகவும் பால்ய வயதுத் திருமணம், இளவயதுக் கர்ப்பம் என்பனவற்றால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து விழிப்புணர்வூட்டப்பட்ன.
அங்கு பெற்றோர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மஹ்பூன்நிஸா, சிறுவர்கள் விடயத்தில் இடம்பெறும் துஷ்பிரயோகம், வேலைக்கமர்த்துதல், பாடசாலை இடை விலகல், இளவயதுத் திருமணம், போதைப் பொருள் பாவனையிலும் விற்பனையில் ஈடுபடுத்துதல் என்பன தண்டனைக்குரிய குற்றமாகும் என்றார்.”
நிகழ்வின் இறுதியில் பாடசாலையை விட்டு இடைவிலகிய பெற்றோரை இழந்த மாணவர்கள் சுமார் 10 பேருக்கு அவர்கள் மீண்டும் வகுப்புக்களில் இணைந்து கொள்வதற்காக மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தரால் கற்றல் உபகரணத் தொகுதியும் வழங்கி வைக்கப்பட்டன.
0 Comments:
Post a Comment