இலங்கையில் வாழும் மூன்றாம் பாலினத்தவர்கள் அஞ்சிப் பயந்து சமூகத்திலிருந்து ஒதுங்கி உரிமைகளை இழந்து அடையாளமே இல்லாதவர்களாக வாழும் பரிதாப நிலையுள்ளதாக இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நுண்கலைத்துறை காண்பியற் கலைப்பிரிவின் ஆய்வாளரான ரவிச்சந்திரன் சுதா தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் இடம்பெற்று வரும் காண்பியற் கலையினூடாக சமூகப் பிரக்ஞையை வெளிப்டுத்தும் நிகழ்வின்போது அவர் திங்கட்கிழமை 25.12.2017 இந்தக் கருத்தை வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் குறிப்பிட்ட காண்பியற் கலை இறுதியாண்டு மாணவியும் துறைசார் பயிற்சி ஆய்வாளருமான அவர் கூறியதாவது, “அவ(ன்,ள்)” என்ற இந்தத் கருப்பொருளினூடாக இலங்கையில் மூன்றாம் பாலினத்வர்களின் வாழ்வியலில் உள்ள அவஸ்தையை ஏனைய சகலருக்கும் புரிய வைக்கும் விதத்தில் பரந்துபட்ட அக்கறை தேவையாகவுள்ளது என்பதனால் சமூகப் பிரக்ஞையை ஏற்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி முன்வைக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் பாலினத்தவர் அனுபவிக்கும் சொல்லொண்ணாத் துயரங்களை முடிவுக்குக் கொண்டு வர மானிடர் என்ற ரீதியில் அனைவரும் அக்கறை செலுத்த வேண்டும்.
அவர்களது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் ஏதோவொரு பால் வேறுபாடு காரணமாக மூன்றாம் பாலினத்தவர்களாக தங்களைப் வெளிப்படுத்தும் அவர்கள், மனிதர்களாக அவர்கள் நடமாடினாலும் உண்மையில் அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் சொல்லுந்தரமன்று.
சமூகத்தில் பொதுவாகவே ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையிலான பாலினப்பாகுபாட்டு ஏற்றத் தாழ்வுகள் உள்ளன.
அவ்வாறானதொரு சமூக வாழ்வியலின் மத்தியில் மூன்றாம் பாலினத்தவர்கள் இதை விடவும் பல சங்கடங்களுக்கு முகங் கொடுத்து வருகின்றார்கள்.
மூன்றாம் பாலினத்தவர்களாக அவர்கள் தங்களை அடையாளம் காட்டிக் கொள்வதே ஒரு சமூக கலாச்சாரப் பிரச்சினையாக உள்ளது.
மனித உரிமைகளை மதிக்கும் நாடுகளில் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை யாரென்று உரிமை கோரிக் கொள்வதற்கான பாதுகாப்பு, பராமரிப்புடன் கூடிய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன.
நான் ஆய்வு செய்ததில் மூன்றாம் பாலினத்தவர்களாக தங்களை உணர்ந்து கொண்டவர்கள் சமூகத்திலிருந்து தாங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் உயிரிருந்தும் ஒரு ஜடமாக வாழும் மனிதக் கூட்டங்களாக மூன்றாம் பாலினத்தவர்கள் தங்களை உணருகின்றார்கள்.
இது ஒரு பரிதாபகரமான நிலைமை. சமூகத்தில் ஒரு அங்கமாக மூன்றாம் பாலினத்தவர்களை ஏற்றுக் கொள்ளும் பரந்துபட்ட மனப்பாங்கு உருவாக வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்களை அவர்களது குடும்பத்தில் தொடங்கி சமூகமும் நாடும் அங்கீகரிக்க வேண்டும்.
மூன்றாம் பாலினத்தவர்களின் கல்வி தடைப்பட்டுள்ளது. அடையாள அட்டை பெறுதல் போன்ற உரிமைகளும் இல்லாமல் போயுள்ளன.
சமூக ஒதுக்கத்தால் பாதுகாப்புக் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன.
மூன்றாம் பாலினத்தவர்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் என்கின்ற வகையில், அவர்களது கல்வி உட்பட அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்போதுதான் அவர்களது மனித வளத்தை நாடு பெற்றுக் கொள்ள முடியும். அதேவேளை மனிதப் பிறவிகள் அனைவரும் சமமான மனித உரிமைகளை அனுபவிக்கவும் வழியேற்படும்.” என்றார்.
0 Comments:
Post a Comment