ஏறாவூர்ப் பிரதேசத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கும் சகல கட்சிகளையும் மற்றும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த வேட்பாளர்கள் பொது மேடையில் தோன்றி கொள்கை விளக்கம் அளிக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவரும் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளருமான அஷ்ஷெய்ஹ் எம்.எல். அப்துல் வாஜித் தெரிவித்தார்.
இது தொடர்பாக திங்கட்கிழமை 18.12.2017 விவரம் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை என்பனவற்றின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டள்ளது.
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் ஏறாவூர் ஜம்மிய்யத்துல் உலமா சபை ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச சபை என்பனவற்றின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான பரஸ்பர கலந்துரையாடல் ஆக்கபூர்வமாக இடம்பெற்றது.
கலந்துரையாடலின் இறுதியில் மூன்று தீர்மானங்களில் அபேட்சகர்கள் ஒருமித்த உடன்பாட்டைக் கண்டுள்ளார்கள்.
ஏட்டிக்குப் போட்டியான வெறுப்பேற்றி, வன்முறைகளுக்குத் தூபமிடும் அரசியல் பிரச்சார முன்னெடுப்புக்களைத் தவிர்த்து மக்களது இயல்பு வாழ்க்கையையும் அமைதியையும் குழப்பாத, கருத்துச் சுதந்திரத்தையும் மனித உரிமைகளையும் மதிக்கின்ற தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பதற்கு வசதியாக இணங்கிக் கொண்டதின்படி சம்மேளனமும் ஜம்மிய்யத்துல் உலமா சபையும் இணைந்து கட்சி மற்றும் சுயேச்சைக் குழுத் தலைவர்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுத்தல்.
ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் ஏறாவூர் ஜம்மியத்துல் உலமா சபையும் இணைந்து அமைக்கும் ஒரு பொது மேடையில் ஒவ்வொரு கட்சியையும் சுயேச்சைக் குழுவையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமை வேட்பாளர் அல்லது அவர்களால் தீர்மானிக்கப்படும் வேட்பாளர் தங்களது கொள்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தல்.
சமூக அமைதியையும் ஜனநாயகப் பண்புகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தேவையேற்படும் போதெல்லாம் அபேட்சகர்களுடன் சந்திப்புக்களை மேற்கொள்ளல்.
0 Comments:
Post a Comment