6 Dec 2017

மட்டு மாவட்டத்தில் அனர்த்த நிலை தொடர்பில் அச்சங் கொள்ளத் தேவையில்லை - அரசாங்க அதிபர் ம.உதயகுமார்.

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் இருப்பதாகவும் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் செவ்வாய்க்கிழமை (05) மாலை  தெரிவித்தார்.

அனர்த்தம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே ஏற்பட்டுள்ள பீதி குறித்து செவவ்வாய்க் கிழமை மாலை மாவட்ட செயலகத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக செவ்வாய்க் கிழமை முதல் 7ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த நிலை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் மற்றும் அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பான அரச அதிகாரிகளுடான  அவசர கலந்துரையாடல் செவ்வாய்க் கிழமை பிற்பகல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.

நடைபெற்ற அவசரக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், பிரதம கணக்காளர் எஸ்நேசராஜா, மட்டக்களப்பு மாவட்ட அரச திணைகள் உயர் மட்ட அதிகாரிகள், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , முப்படையின் உயர் அதிகாரிகள், சிவில் சமூக உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதுவரையில் சுனாமி அனர்த்தமோ, சூறாவளி அனத்தமோ ஏற்படுவது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை. வங்காள விரிகுhடாவின் தென்கிழக்காக 950 கிலோமீற்றருக்கு அப்பால் தாளமுக்கம் உருவாகியிருக்கிறது. அது பலத்த காற்றாக மாறி வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது எங்களது கரையோரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் வாநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக கடல் தொழில்களில் ஈடுபடுபவர்கள் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் திகதிகளில் தொழில்களில் ஈடுபடாமல் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கரையோங்களில் வசிப்பவர்களை அறிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டள்ளது.

ஏற்கனவே பிரதேச சபைகள், பிரதேச செயலாளர்களுக்கும் எந்த ஒரு அனர்த்தம் ஏற்பட்டாலும் அதற்கான நடிவடிக்கைகளில் ஈடுபடும் படி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மக்கள் இதுதொடர்பில் அனாவசியமாக அச்சங் கொள்ளத் தேவையில்லை. என்றும் அது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கும் பட்சத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும் என்றும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

அதே நேரம், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கம் அடுத்த 24 மணித்தியாலத்தில் தாழமுக்கமாக (னுநிசநளளழைn)  வலுவடைந்து பின்னர் அடுத்த 48 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக (னுநநி னுநிசநளளழைn)  மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பின்னர் 05 ஆம் திகதி மற்றும் 06 ஆம் திகதிகளில் இலங்கை கரையோரமாக நகர்ந்து எதிர்வரும் 03 நாட்களில் வட தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராக்கும் இடையில் கரையை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தினால் இலங்கையிலும் சூழவுள்ள கடல் பிராந்தியங்களிலும் முக்கியமாக வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும்.

இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் நாளை முதல் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் முதல் 80 கிலோமீற்றர் வரையான அதிகரிப்பதுடன் வங்காளவிரிகுடாப் பகுதியில் இந்தக் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 90 கிலோமீற்றர் முதல் 100 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசும்.

பொத்துவில் முதல் மட்டக்களப்பு, திருகோணமலை ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை காணப்படும்.

எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்களின் கடல் நடவடிக்கை பாதுகாப்பற்றது எனவும் வாநிலை அவதான நிலைத்தின் அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: