மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மேவாண்டகுளம் பகுதியிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் மண் வியாபாரிகள், கொந்தராத்துக்காரர்கள் கிராமத்து வீதிகளைத் தோண்டி மண் அகழ்வதால் பெரும் பாதிப்பும் ஆபத்தும் ஏற்பட்டு வருவதாக கிராம மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.இந்த அழிப்புகளைத் தடுத்து நிறுத்துமாறும் கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது விடயமாக ஆலங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் குமாரசாமி கேஸ்வரன் வியாழக்கிழமை 30.11.2017 கருத்துத் தெரிவிக்கும்போது இந்த விவரங்களைக் குறிப்பிட்டார்.
வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காரமுனைக் கிராமத்திற்குச் செல்லும் வயல் வெளிகளினூடான விவசாய வீதியோரங்கள் இருபுறமும் உள்ள மண், கொந்தராத்துக்காரர்கள் மற்றும் மண் வியாபாரிகளால் அகழப்படுகின்றன.
இதனால் கிராம மக்கள் பயணம் செய்யும் வீதிகள் பள்ளமும் படுகுழியுமாகி சிதைந்து சேறாகி வருகிறது.
அத்துடன் இவ்வாறு வீதி சிதைக்கப்படுவதால், வெள்ளப் பெருக்கு ஏற்படவும், வீதி அருகிலுள்ள அதியுயர் மின் அழுத்த கம்பிகளைத் தாங்கிச் செல்லும் மின் கம்பங்கள் எந்நேரத்திலும் சரிந்து விழுந்து ஆபத்து நேர்வதற்கும் சந்தர்ப்பம் உள்ளது.
வீதியோரங்களை வெட்டி சட்டவிரோதமாக மண் அகழ்வோர் மண்ணை ஏற்றிச் செல்வதற்காக நாளாந்தம் சுமார் 20 தடவைகளுக்கு மேல் ரிப்பர் வாகனங்களைப் பயன்படுத்துவதால் வீதி சேறும் சகதியுமாகிக் காட்சியளிக்கின்றது.
இந்த சட்டவிரோதச் செயல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
0 Comments:
Post a Comment