6 Nov 2017

பேக்கரியில் திருடிய மற்றுமொரு பேக்கரி உரிமையாளர் கைது

SHARE
ஏறாவூர் நகரில் உள்ள பேக்கரியொன்றில் சூட்சுமமாகத் பணத் திருட்டில் ஈடுபட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த மற்றுமொரு பேக்கரி உரிமையாளரைத் தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இத்திருட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபரை சிசிரிவி காணொளிக் கமெரா உதவியுடன் திங்கட்கிழமை 06.11.2017 தாம் கைது செய்திருப்பதாகவும்  பொலிஸார் மேலும் தெரிவித்தனர்;.

இச்சம்பவம்பற்றி மேலும் தெரியவருவதாவது,  ஏறாவூர்,  காதியார் வீதியை அண்டியுள்ள பேக்கரி ஒன்றிற்கு ஞாயிற்றுக்கிழமை நண்பகலளவில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் அந்த பேக்கரியில் இருந்த பலவகையான கேக் வகைகளினதும் விலையை கேட்டு விட்டு, தனக்கு உயர் ரக கேக் ஆறரைக் கிலோ தருமாறும் அவற்றைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிப் பொதியிடுமாறும் கேட்டுள்ளார்.

வாடிக்கையாளர் கேட்டதற்கேற்ப ஏறாவூர் பேக்கரி உரிமையாராளரான ஆதம்பாவா அப்துல் மஜீத்  என்பவர் கேக்கை நிறுத்தெடுத்து பின்பக்கமாகவுள்ள பகுதியில் அவற்றைச் சிறு துண்டுகளாக வெட்டி பொதியிடத் தயாரான போது, கேக் வாங்க வந்த நபர்  தான் அடுத்த கடையில் கடதாசி வாங்க வேண்டியிருப்பதால் அங்கு சென்று வருவதாகக் கூறியுள்ளார்.

சிறிது நேர இடைவெளியில் சிறுமி ஒருத்தி வந்து டிப்பிடிப் நறுக்குத் தீனிப் பக்கெற் வாங்கிக் கொண்டதும் அந்தப் பணத்தை கல்லாப் பெட்டியில் இடுவதற்கு பேக்கரி உரிமையாளர் முனைந்தபோது அதிலிருந்த சுமார் 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டு கல்லாப்பெட்டி காலியாகி இருந்துள்ளது.
இதனிடையே கேக் வெட்டிப் பொதி செய்யுமாறு கேட்ட வாடிக்கையாளரான நபர் திரும்பி வரவேயில்லை.

இதன்பின்னர் சிசிரிவி காணொளிக் கமெராவை பரிசோதித்தபோது கேக் வெட்டிப் பொதியிடுமாறு கூறிய சந்தேக நபரே திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இச்சந்தேக நபர் வாழைச்சேனையிலும் இன்னும் சில இடங்களிலும் உள்ள பேக்கரிகளில் இதுபோன்ற பணத் திருட்டுக்களில் ஈடுபட்டிருப்பது ஆரம்பக் கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருப்பதாக பொலிஸார் கூறினர்.

சுமார் 40 வயது மதிக்கத் தக்க இச்சந்தேக நபருக்கு மட்டக்களப்பு நகரில் சொந்தமாக ஒரு பேக்கரி இருப்பதும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
பொலிஸார் சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 




SHARE

Author: verified_user

0 Comments: