அரச கரும மொழிகளில் அலுவலர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது நாட்டில் இன ஐக்கியத்திற்கு உதவும் என தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தின் உதவிப் பணிப்பாளர் கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசாங்க அலுவலர்களுக்கும் மற்றும் உயர் கல்வி மாணவர்களுக்கும் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் வழங்கப்பட்டு வரும் சகோதர மொழியான சிங்களம் மற்றும் இணைப்பு மொழியான ஆங்கில மொழிக் கல்வி பற்றி அவர் விவரித்தார்.
தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் அனுசரணையுடன் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட 12 நாட்கள் சிங்கள மொழிப் பயிற்சி நெறியின் நிறைவு நாள் நிகழ்வுகள் மட்டக்களப்பில் சனிக்கிழமை (18) நடைபெற்றன. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிகும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது@ மொழியைக் கற்றுக் கொள்வதில் ஏற்படும் ஆர்வம் பிளவுபட்ட இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், புரிந்துணர்வின் ஊடாக நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்த பெருந்துணை புரியும்.
நாடுபூராகவும் சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்டோருக்கு தமிழும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டோருக்கு சிங்களமும் இவ்விரண்டுக்கும் மேலதிகமாக இணைப்பு மொழியான ஆங்கிலமும் போதிக்கப்பட்டு வருகின்றது.
வருடந்தோறும் அரசாங்க உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், மற்றும் உயர் கல்வி மாணவர்கள் உட்பட சுமார் 15 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பரஸ்பர அரச கரும மொழித் தேர்ச்சிக் கல்வியளிக்கப்படுகின்றார்கள்.
குறிப்பாக சிங்கள மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட வைத்தியர்கள் சுமார் 800-1000 பேருக்கு வருடாந்தம் தமிழ் மொழி மூலப் பயிற்சி அளிக்கப்படுகின்றது.
பொதுவாகவே, இன மத பேதம் பாராது பணி வைத்தியர்கள் பணி செய்கின்றார்கள்.
அதேவேளை சிங்களத்தைத் தாய் மொழியாகக் கொண்ட பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த வைத்தியர்கள் சிறுபான்மை இன நோயாளிகளுடன் உணர்வு ரீதியாகத் தொடர்பு கொள்ளும் ஆற்றலை மேம்படுத்துவதற்கு இந்த தமிழ் மொழிப் போதனை உதவிகரமாக அமைந்துள்ளது.
வெறுமனே ஒருவருடன் கடமைக்காகத் தொடர்பு கொள்வதை விட அவரது சொந்த மொழியில் தொடர்பு கொண்டு உணர்வுகளை மதித்து புரிந்து செயலாற்றும் அரச உத்தியோகத்தர்களாக ஒவ்வொரு அரச அலுவலர்களும் இருப்பது நாட்டில் நிரந்தர அமைதிக்கு வழிவகுக்கும்.
மேலும், புதிய நிருவாகக் கொள்கையின்படி 50 வயதைக் கடந்த பாடசாலை அதிபர்கள் சுமார் 100 மணித்தியால அரச கரும மொழிகள் வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெறும்பட்சத்தில் அவர் 2014 ஆம் ஆண்டின் அரச நிருவாக சுற்றறிக்கையின்படி வேண்டப்பட்டுள்ள மொழித் தேர்ச்சி பரீட்சையிலிருந்து விடுவிக்கப்படும் வாய்ப்பைப் பெறுகின்றார்.
எனவே, இந்த பரஸ்பர மொழி ஆற்றலை அடைந்து கொள்வதற்கான அரிய வாய்ப்பை நாட்டிலுள்ள அரச அலுவலர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்றார்.
0 Comments:
Post a Comment