உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முற்பட்டபோது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வடிகானுக்குள் விழுந்து மோதியதில் மலேசியா செல்லவிருந்த இளைஞன் அந்த இடத்திலேயே பலியாகிய சம்பவம் வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாலக்காடு எனுமிடத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை 28.10.2017 மாலை இடம்பெற்ற இத்துயர சம்பவத்தில் புதிய காத்தான்குடி 3, கோழிக்காரர் வீதியைச் சேர்ந்த கலீலுர்ரஹ்மான் முஹம்மது ஹரிஸ் (வயது 23) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மேற்படி இளைஞன் தொழில்வாய்ப்புப் பெற்று திங்கட்கிழமை (30.10.2017) மலேசியா நாட்டுக்குச் செல்லவிருந்த நிலையில் தனது நண்பருடன் சேர்ந்து உன்னிச்சைக் குளத்தைப் பார்வையிட்டு உல்லாசமாகப் பொழுதைப் போக்குவதற்காக இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.
அவ்வேளையில் வவுணதீவு பாலக்காடு எனும் இடத்தில் வைத்து வீதியால் சென்று கொண்டிருந்த உழவு இயந்திரத்தை முந்திச் செல்வதற்காக மோட்டார் சைக்கிளை வேகப்படுத்தியபோது அது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதி மருங்கிலிருந்த வடிகானுக்குள் மோதி விழுந்துள்ளது.
படுகாயமடைந்த இளைஞன் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். அவரது நண்பரான காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மத் ஸியாம் (வயது 23) என்ற இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம்பற்றி வவுணதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment