கிழக்கு மாகாண சபையின் இறுதி இரண்டரை வருடங்களில் ஆட்சிக்குத் தலைமையேற்று நடாத்திய முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் வகிபாகம் அபார திறமையுடையதாக அமைந்திருந்தது என நகர திட்டமிடல் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் அல்குர்ஆனை மனனம் செய்த“ஹாபிழ்கள்” எனப்படுவோருக்கிடையில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்ச்சிகளிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் நினைவுச் சின்னங்களும் வழங்கி வைத்த நிகழ்வு சனிக்கிழமை 30.09.2017 இரவு ஏறாவூர் குல்லியது தாரில் உலூம் அரபுக் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
அங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு தொடர்ந்து உரையாற்றிய றவூப் ஹக்கீம், பல்வேறு கொள்கைகளையுடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய 4 கட்சிகளை உள்ளடக்கிய ஒரு தேசிய ஆட்சியைக் கொண்டு நடத்துவதென்பது லேசுப்பட்ட ஒரு காரியமல்ல.
ஆனால், அதனை இலேசாக சாதித்து முடித்த பெருமை முதலமைச்ரைச் சாரும்.
பல சவால்களுக்கு முகங் கொடுத்த போதிலும் திறம்பட நடாத்திக் காட்டியுள்ளார். அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.
அல்குர்ஆனைச் மனதிலே பதித்து அதனைச் சுமந்திருக்கும் இந்த நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கானவர்களை ஒன்று திரட்டி அவர்களது நலன் பேணுவதற்கென்று ஒரு அமைப்பை உருவாக்கி அவரகளை இந்த சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக மாற்றுவதற்கு முதலமைச்சர் முன்னெடுத்திருக்கும் இந்தத் திட்டம் பாராட்டப்பட வேண்டிது.
அரச மட்டத்திலே இது போன்ற காரியங்கள் ஒருபோதும் செய்யப்படுவதாக இல்லை.
வருடாவரும் ஒரு வழமைக்காக தேசிய மீலாத் விழாவை நடாத்துகின்றோம்.
அதுவும் இப்பொழுது கழுதை தேய்ந்து ஒரு கட்டெறும்பான கதையாகத்தான் ஆகிவிட்டிருக்கின்றது என்பதை வருத்தத்தோடுதான் சொல்ல வேண்டியிருக்கின்றது.
மீலாதுந்நபி விழாவுக்காக அரசாங்க ஒதுக்கீடுகள் பெரிதாக என்று எதுவுமில்லை.
அதேவேளை அதற்காகக் கிடைப்பதைக் கொண்டு இன்னும் கொஞ்சம் பிரயோசனமாக நடாத்தலாம் என்பது குறித்து சிந்திப்பது நல்லது.
இப்படியான தனிப்பட்ட முயற்சிகளின் மூலம் செய்யப்படுகின்ற நிகழ்வுகளை முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தையும் சேர்த்து அரவணைத்துச் செய்து கொண்டால் அரச அங்கீகாரம் இருக்கும்.
அரச அங்கீகாரம் என்பது கிடைக்கின்றபோது அதற்கொரு வலிமையும் பெறுமானமும் இருக்கும்.
எதிர்காலத்திலே நிகழ்வுகளை நடாத்துகின்றபோது முஸ்லிம் சமய விவகாரத் திணைக்களத்தின் அனுசரணையோடு இடம்பெற்றது என்கின்ற பதிவை ஏற்படுத்துதல் உசிதமானது.
அது அரசாங்கத்தின் அங்கீகாரத்தைக் குறிப்பதாகவும் இருக்கும்.
அதேவேளை வெளிநாடுகளிலிருந்தும் ஒத்தாசைகள் கிடைக்கும் என்றும் கருதுகின்றேன்” என்றார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாகாண மட்டத்தில் அல்குர் ஆன் ஓதல் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே ஒரு இலட்சம், 75 ஆயிரம், 60 ஆயிரம் ரூபாய் பணத் தொகையும், மாவட்ட மட்டத்தில் இதே அடிப்படையில் தலா 50 ஆயிரம், 40 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் பணத் தொகையும் பரிசாக வழங்கப்பட்டன.
அத்துடன் நிகழ்வுகளில் திறமையை வெளிப்படுத்திய 350 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. இவர்களில் சுமார் 100 பேர் பெண்களாகும்.
0 Comments:
Post a Comment