அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட உத்தரவாத கல்வியை வழங்கும் புதிய திட்டம் தற்போது நாடு முழுவதிலுமுள்ள 42 தேசியப் பாடசாலைகளில் ஒக்ரோபெர் முதல் வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பரீட்சார்த்தமாக ஆரம்பிக்கப்படவுள்ள இம்முயற்சியின் விளக்கமளிப்பு ஒக்ரோபெர் 02ஆம் திகதி திங்கட்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியப் பாடசாலைகளில் இடம்பெற்றது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் குறைந்த பெறுபேறுகளைப் பெறும் மாணவர்களுக்காக 27 புதிய பாடநெறிகள் இத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கடந்த வருடம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றி போதுமான புள்ளிகளைப் பெறாத 4419 மாணவர்கள் இத்திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
இவர்களுக்கு எழுத்து மற்றும் அதுசார்ந்த வேலைகள் குறைக்கப்பட்டு செயற்பாடுகள் சார்ந்ததாக கற்றல் மற்றும் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளன.
பிரேரிக்கப்பட்டுள்ள 27 பாடநெறிகளும் தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை சார்ந்த பாடங்களாகும்.
இந்த பாடத்திட்டத்தில், உளவியல் மற்றும் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு, விளையாட்டு, உடற்கல்வி மற்றும் கிராஃபிக் வடிவமைப்பு, ஃபேஷன் வடிவமைப்பு, கட்டுமான தொழில்நுட்ப ஆய்வு, நீர் வளங்கள் தொழில்நுட்ப ஆய்வு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது விருப்பம் மற்றும் பிரதேசத்திற்குத் தேவையான தொழில்துறை என்பனவற்றின் அடிப்படையில் மாணவர்கள் தமக்குரிய பாடங்களைத் தெரிவு செய்வதற்கான சிறப்பு ஏற்பாடுகள் இப்புதிய கல்வித் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
சுமார் 5 பில்லியன் ரூபாய் செலவில் ஆரம்பிக்கப்படவுள்ள இப்புதிய கல்வித் திட்டத்தின் பரீட்சார்த்த முயற்சிகள் வெற்றியளிக்கும்பட்சத்தில் நாட்டிலுள்ள ஏனைய பாடசாலைகளிலும் தேவையான வசதிகளை உள்ளடக்கி இத்திட்டத்தை விரிவுபடுத்தவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தினால் இலங்கையின் கல்விக் கொள்கையில் மேற்கொள்ளப்பட்ட 3 பெரும் மாற்றங்களில் அனைத்து மாணவர்களுக்கும் 13 வருட தொடர் கல்வியை கிடைக்கப்பெறச் செய்தல் என்ற இத்திட்டத்திற்கு பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment