19 Sept 2017

பெண்களின் உள்ளுர் உற்பத்தியை ஊக்குவிக்கும் மாபெரும் வியாபார சந்தை

SHARE
உள்ளுர் மூலவளங்களைப் பயன்படுத்தி பெண்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்பையும் பிரபல்யத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அம்கோர் எனப்படும் தன்னார்வ உதவு நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாபார சந்தைகளை ஏற்பாடு செய்து வருவதாக அந்நிறுவனத்தின் வாழ்வாதாரத்துக்கான கள அலுவலர் புண்ணியமூர்த்தி ஜீவிதா தெரிவித்தார்.
செப்ரெம்பெர் 19, 20ம் திகதிகளில் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு பிரதேச சபை மைதானத்திலும், 21, 22ம் திகதிகளில் ஏறாவூர் ஐயங்கேணி, உதயதாரகை விளையாட்டு மைதானத்திலும், 22, 23ம் திகதிகளில் துறைநீலாவணை பொதுவிளையாட்டு மைதானத்திலும் இந்த வியாபார சந்தைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதில் சுமார் 15 இற்கு மேற்பட்ட சேவை வளங்குநர் நிறுவனங்களும் பங்குபற்றுகின்றனர். மேலும், பெண்கள் சுய உதவி உற்பத்திக் குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் வியாபார சந்தையில் இடம்பெறவுள்ளன.
பெண்களை தங்குதிறனுள்ள உற்பத்தியாளர்களாக உருவாக்குவதும், கிடைக்கக் கூடிய உள்ளுர் வளங்களைக் கொண்டு சிறந்த உற்பத்திகளை மேற்கொள்வதும், இலாபமீட்டக் கூடிய சிறந்த சந்தை வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதும், சேவை வளங்குநர்களை இணைத்தலும், புதிய உற்பத்தியாளர்களை ஊக்குவித்தலும் இத்தகைய வியாபார சந்தைககள் நடாத்தப்படுவதின் நோக்கம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் அதிக வட்டிக்குக் கடன்படும் நிலையிலிருந்து அவர்களை மீட்டு கிராமிய பொருளாதார சமூக அணிதிரட்டலில் பெண்களின் வகிபாகத்தை அதிகரிக்கச் செய்வதற்காக தமது நிறுவனம் மாவட்ட மட்டத்தில் சுமார் 90 சுய உதவி முன்னேற்றக் குழுக்களை உருவாக்கியுள்ளதோடு அதன் செயற்பாடுகள் வெற்றியளித்திருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: