கிரான்புல்சேனை அணைக்கட்டு வேலை சீன நாட்டு நிருமாண நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படுமாயின் இழுத்தடிப்புக்கள் மோசடிகள் இன்றி உயர்தரத்தில் அதன் நிருமாணப் பணிகளை நிறைவு செய்யக் கூடியதாக இருக்கும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே. துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாயத்தில் பாரிய புரட்சியை ஏற்படுத்தக் கூடிய கிரான்புல்சேனை அணைக்கட்டு நிருமாணிப்பதில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி வருவது சம்பந்தமாக கேட்டபோது திங்கட்கிழமை 25.09.2017 மேலும் தெரிவித்த அவர்@ அதிக நிதி ஒதுக்கீட்டில் பாரிய நிருமாணப் பணிகளை மேற்கொள்ளும்போது நாம் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும்.
கடந்த சுமார் 60 வருடங்களாக மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வந்த மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு பெரும் விவசாயப் பரப்பான கிரான்புல்சேனை அணைக்கட்டு நிருமாணம் தற்பொழுது கைகூடி வந்துள்ளது.
இதனையிட்டு பிரதேச விவசாயிகள் பெருத்த எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். அந்த எதிர்பார்ப்பு ஏமாற்றமாகிவிடக் கூடாது என்பதினால் அதன் நிருமாணப் பணிகள் குறித்து நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
அதனாலேயே நான் நிருமாணிப் பணிகளுக்காக வெளிப்படைத்தன்மையில்லாத ஒப்பந்தங்கள் எதனையும் செய்யாது பகிரங்கமான் கேள்விப்பத்திரங்களைக் கோருவதன் மூலம் தகுதியான கட்டிட நிருமாணங்களைச் செய்வோருக்கு அணைக்கட்டு நிருமாணப்பணியை ஒப்படைக்க முடியும் என்று வலியுறுத்தி வருகின்றேன்.
தற்போதைய அவதானிப்பில் மற்றவர்களை விட சீன நிருமாண நிறுவனங்கள் துரித கதியிலும் அதேவேளை சிறப்பாகவும் தரமாகவும் நிருமாணப்பணிகளை செவ்வனே செய்து முடிப்பார்கள் என்ற அபிப்பிராயம் நிலவுகிறது.
எனவே, தவறான கொந்தராத்துக் காரர்களிடம் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை கொடுத்து ஏமார்ந்து மக்களையும் அதிருப்தியடையச் செய்வதை விட சிறப்பாகச் செய்யும் சீன நிறுவனங்களிடம் ஒப்படைத்து மக்களின் பெரிய எதிர்பார்ப்பை திருப்தியளிக்கச் செய்வது சிறந்தது.
கிரான்புல்சேனை அணைக்கட்டு நிரமாணிக்கப்பட்டவுடன் அதனை அண்டிய பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் ஆண்டுக்கு மும்முறை நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுமார் 690 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள கிரான்புல்சேனை அணைக்கட்டின் ஆரம்ப தள வேலைகளுக்காக தற்போதைக்கு 40 இலட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.” என்றார்.
0 Comments:
Post a Comment