21 Sept 2017

கிழக்கு மாகாண நிருவாகத்தின் இறுதி இரண்டரை வருடங்கள் இன மத பேதமின்றிச் சேவை செய்த பொற்காலமாய் அமைந்தது. மாகாண சபை உறுப்பினர் ஷி‪ப்லி பாறூக் பெருமிதம்

SHARE
கிழக்கு மாகாண நிருவாகத்தின் இறுதி இரண்டரை வருடங்கள் இன மத பேதமின்றிச் சேவை செய்த  பொற்காலமாய் அமைந்தது.

மாகாண சபை உறுப்பினர் ஷி‪ப்லி பாறூக் பெருமிதம்

கிழக்கு மாகாண நிருவாகத்தின் தற்போதைய கடைசி இரண்டரை வருட கால ஆட்சி பொற்காலம் போன்றமைந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷி‪ப்லி பாறூக் தெரிவித்தார்.

ஏறாவூர் அல் ஜுப்ரியா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை 21.09.2017 இடம்பெற்ற பாடசாலைக்கான தளவாடக் கையளிப்பு நிகழ்வில் அவர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கடந்த மாகாண சபை நிருவாகத்தின் 4 வருடங்களும், 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாண சபையில் 5 வருடங்கள் பூர்த்தி செய்கின்ற தற்போதைய கால கட்டத்தில் இந்த இறுதி இரண்டரை வருடங்களும் மனதுக்கு நிறைவாக மக்களுக்கு இன மத பேதமின்றிச் சேவை செய்த பொற்காலம் என்றே கருதலாம்.

மத்திய அரசாங்கத்தால் செய்ய முடியாமற் போன விடயங்களையும் இந்த குறுகிய காலப்பகுதிக்குள் மாகாண சபை நிருவாகம் சாதித்திருக்கின்றது.
மிக அதிகமான அபிவிருத்தி, மிக அதிகளவிலான ஆட்சேர்ப்பு, ஆகக் கூடுதலான வேலைவாய்ப்புக்கள், சமூக சேவைப் பணிகள் என்று எத்தனையோ எண்ணிலடங்கா சாதனைகள் நிலைநாட்டப்பட்டிருக்கின்றன.

இதனையும் விட மிக முக்கியமாக பல்லினங்கள் கடந்த கால யுத்தத்தின் விளைவாக பரஸ்பரம் ஒருவர் மீது ஒருவர் அவ நம்பிக்கையோடு இருந்த சங்கடங்களை நீக்கி புரிந்துணர்வோடும் நட்புறவோடும் கைகுலுக்க வைத்த சாதனை இந்த மாகாண சபையின் இறுதி இரண்டரை வருட ஆட்சிக்கு உண்டு.
இந்த சாதனைகளை அடையப் பெறுவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிங்கள சமூகக் கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஒற்றுமை எனும் ஒரே கொடியின் கீழ் பயணிக்க வைத்த பெருமை தற்போதைய மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தின் நஸீர் அஹமதையே சாரும்.

இதற்கு முன்னிருந்த மாகாண நிருவாகங்கள் மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலின் கீழ் தங்களது சுய விருப்பு வெறுப்புகளுக்கு அமைவாக ஆட்சி செலுத்தியதேயன்றி மக்களுடைய விருப்பு வெறுப்பு தேவைகள், பிரச்சினைகள் அங்கு கவனத்திற் கொள்ளப்படவில்லை.

ஆக்கபூர்வமான எதையுமே கடந்த மாகாண ஆட்சி நிருவாகம் செய்யாததால் அது மக்களின் நம்பிக்கையை இழந்திருந்தது. அது உண்மையில் அவர்களின் தோல்வியாகும்.

ஆனால், இப்பொழுது நாம் சிறந்த ஆட்சியை நடத்திக் காட்டி மக்களையும் மாகாண நிருவாகத்தையும் வெற்றியடையச் செய்திருக்கின்றோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: