20 Sept 2017

மட்டக்களப்பில் குப்பைத் தடை நீக்கம்

SHARE
மட்டக்களப்பு மாநகரசபை திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதற்கு நீதிவான் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நீக்கியுள்ளது.
புதன்கிழமை (20) மட்டக்களப்பு மாநகரசபையினால் மேல் நீதிமன்றில் குறித்த தடையினை நீக்குமாறு கோரும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரணைசெய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.இஸ்ஸடின் குறித்த தடையுத்தரவினை நீக்கியுள்ளதுடன் இது தொடர்பான விசாரணை எதிர்வரும் 04 ஆம்திகதி எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

புதன்கிழமை மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி.தவராஜாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு குப்பைகள் கொட்டுவதற்கான இடைக்கால தடை நீக்கப்பட்டுள்ளது.

திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கடந்த மாதம் 22ஆம் திகதி ஏற்பட்ட தீயினை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் குறித்த நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கழிவுகளை கொட்டுவதை தடுக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் அப்பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டு எதிர்வரும் 28ஆம் திகதிவரையில் அப்பகுதியில் திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த தடை காரணமாக மட்டக்களப்பு நகரில் கழிவுகளை அகற்றுவதை மட்டக்களப்பு மாநகரசபை இடைநிறுத்தியதன் காரணமாக மட்டக்களப்பு மாநகரம் பெரும் சுகாதார நெருக்கடியை எதிர்நோக்கிவருவது குறிப்பிடத்தக்கது.

SHARE

Author: verified_user

0 Comments: