ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்கள் அறுவரில் இருவருக்கு கடந்த 12.09.2017 அன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்தது.
தமக்குப் பிணை வழங்குமாறு கேட்டு சந்தேக நபர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதான விசாரணை கடந்த 12ஆம் திகதி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இர்ஸதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களைப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25) மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோர் தலா இரண்டரை இலட்ச ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்ச ரூபாய் கொண்ட இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
சந்தேக நபர்களில் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் என்பவர் கடந்த வியாழக்கிழமை 14.09.2017 அன்று பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்து வெளியே வந்திருந்தார்.
ஆயினும், பிணை வழங்கப்பட்ட மற்றைய சந்தேக நபரான இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 25) என்பவர் பிணைத் தொகையான இரண்டரை இலட்ச ரூபா ரொக்கப் பணத்தை செலுத்தத் தவறியதனால் தொடர்ந்து சிறையில் உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
எனினும், அடுத்த ஓரிரு தினங்களில் தாம் குறித்த பணத்தொகையைச் செலுத்தி சந்தேக நபரை சிறையிலிருந்து வெளியே எடுக்க முயற்சிப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
கடந்த வருடம் 2016 செப்ரெம்பெர் மாதம் 11ஆம் ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகள் ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த வருடம் செப்ரெம்பெர் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் குறித்த இருவருக்குப் பிணை வழங்கப்பட்டது.
அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30) ஆகியோர் தொடர்ந்தும் செப்ரெம்பெர் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment