மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் வாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற 577 முறைப்பாடுகளில் 420 முறைப்பாடுகள் சம்பந்தமாக தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கிலங்கை தன்னம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனப் பணிப்பாளர் (Eastern Self Reliant Community Awakening Organisation) எஸ். ஸ்பிரிதியோன் தெரிவித்தார்.
தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாகச் சென்று பிரச்சினைகளில் சிக்கியோருக்கான விழிப்புணர்வு வேலைத் திட்டம் பற்றி விவரிக்கும்போது அவர் இந்த விவரங்களை புதன்கிழமை 13.09.2017 தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் கூறிய அவர்@ “எஸ்கோ” நிறுவனம் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்லும் பணிப்பெண்களின் நலன்சார்ந்த வேலைத் திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில் வெளிநாட்டில் பணிபுரிகின்ற வேளையில் குடும்பத்தினருடான தொடர்பு அற்றுப் போதல், அளவுக்கதிகமான வீட்டுப் பணிகள், சம்பளம் வழங்கப்படாமை, சடலங்களை நாட்டுக்குக் கொண்டு வர முடியாமை, அங்கவீனமடைதல், காணாமல் போதல், தடுத்து வைத்து சித்திரவதை செய்து வேலை வாங்குதல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக உறவினர்களால் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதன் பிரகாரம் நாம் அவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து வருகின்றோம்.
இதுவரை 32 பெண்கள் உட்பட 35 சடலங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இவற்றில் இரண்டு சடலங்கள் மலேசியா நாட்டிலிருந்து இலங்கைக் கொண்டுவந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மத்திய கிழக்கில் பணிபுரியும்போது பல்வேறு பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட 21 குடும்பங்களுக்கு தொழில் தருநரிடமிருந்து 147 இலட்ச ரூபாய் இழப்பீடும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் 70 சதவீதமானவை தொழில் புரியும்போது நிகழ்ந்த மரணத்திற்கான இழப்பீடுகளாகும்.
வீட்டுப் பணிப்பெண்களாக தொழில் வாய்ப்புப் பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோர் சட்டப்படியான வழிமுறைகளின் மூலம் சென்றால் சட்டப்படியான உதவிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணயகத்தினூடாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன..
இதுபற்றி நாம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 8 பிரதேச செயலாளர் பிரிவுகளில் விழிப்புணர்வு வேலைத் திட்டங்களை அமுலாக்கி வருகின்றோம்.
எமது விழிப்புணர்வின் காரணமாக சட்ட விரோதமாக வீட்டுப் பணிப்பெண்களாகச் செல்வோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கின்றது” என்றார்.
0 Comments:
Post a Comment