யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரின் குடும்பங்களுக்கு வீடுகள் நிருமாணித்துக் கொடுக்கும் “ரணவிரு சேவா” அதிகார சபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 39 வீடுகள் நிருமாணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை 17.09.2017 விவரம் தெரிவித்த அவர்@ யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழ்ந்த 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்கான சேமநலன்களை “ரணவிரு சேவா” கவனித்து வருகின்றது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் “ரணவிரு சேவா”பயனாளிக் குடும்பங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டம் தற்போது அமுலாகிக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொன்றும் தலா 22 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவிலமைந்த இந்த வீடுகளை நிருமாணிக்கும் திட்டம் கடந்த ஜுன் மாதம் 19ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தற்போது நிறைவுறும் தறுவாயிலுள்ள இந்த வீட்டு நிருமாண வேலைகள் நொவெம்பர் மாதம் பயனாளிகளிடம் கையளிக்கப்படவுள்ளன.
வாழைச்சேனை, ஏறாவூர், மட்டக்களப்பு நகர், காத்தான்குடி, களுவாஞ்சிக்குடி, பட்டிப்பளை மற்றும் மங்களகம ஆகிய இடங்களில் 19 வீடுகள் தமிழ் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 19 வீடுகள் முஸ்லிம் சமூக ரணவிரு குடும்பங்களுக்கும் 1 வீடு சிங்கள சமூக ரணவிரு குடும்பத்திற்கும் நிருமாணிக்கப்பட்டு வருகின்றன.
ரணவிரு குடும்பங்களின் சேவைகளை விஸ்தரிக்கும் நோக்கில் மேலும் தேவையுள்ள பயனாளிக் குடும்பங்களுக்கு வீடமைப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும் கீர்த்திகா தெரிவித்தார்.
மாவட்ட அரசாங்க அதிபர் சறோஜினிதேவி சார்ள்ஸின் முழுக்கரிசனையுடன் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி பாதிக்கப்பட்டுப்போயுள்ள ரணவிரு குடும்பங்களின் சேமநலத் திட்டத்திற்கு மாவட்ட அதிகாரி கீர்த்திகா ஜயவர்தன இன வேறுபாடுகளுக்கப்பால் சிறுபான்மைச் சமூகத்தாருக்குச் சேவையாற்றுவதில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருவதாக மாவட்ட ரணவிரு சேவா அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment